டெல்லி கேபிட்டல்ஸ்க்கு தான் IPL கோப்பை போலயே.. யுவராஜை அடுத்து இலங்கை ஜாம்பவானும் அணியில் இணைந்தார்
டெல்லி கேபிட்டல்ஸ்க்கு தான் IPL கோப்பை போலயே.. யுவராஜை அடுத்து இலங்கை ஜாம்பவானும் அணியில் இணைந்தார்
டெல்லி: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தனது பயிற்சியாளர் குழுவில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சமிந்தா வாஸ் டெல்லி அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் ஏற்கனவே டெல்லி அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி அணி ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டதைத் தொடர்ந்து, அதன் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி விடுவிக்கப்பட்டார்.
1996 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த சமிந்தா வாஸ், கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்குகிறார். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 761 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த பதவிக்காக இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான்களான அனில் கும்ப்ளே மற்றும் ஜாகீர் கான் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் உடன்பாட்டில் முடிவடையவில்லை. ஜாகீர் கானுடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம் வரை சென்றதாகவும், கும்ப்ளே உடனான பேச்சுவார்த்தையில் சில நிபந்தனைகளில் உடன்பாடு எட்டப்படாததால் அது தோல்வி அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுவராஜ் சிங் டெல்லி அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சௌரவ் கங்குலி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் தற்போது சமிந்தா வாஸும் இணைந்துள்ளார். டெல்லி அணி கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. 2026 ஐபிஎல் தொடரிலும் 7 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளுடன் டெல்லி அணி ஆறாவது இடத்தையே பிடித்தது.
முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து முன்னாள் கேப்டன் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். அதே வேளையில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ அணிக்கு மாற்றப்பட்டார். ரிஷப் பண்ட்டின் வருகையால், டெல்லி அணியின் முதன்மை விக்கெட் கீப்பர்-பேட்டராக உள்ள கே.எல். ராகுலின் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் எழுந்தன.
இருப்பினும், இந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டெல்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் அண்மையில் சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், "டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கே.எல். ராகுல் எப்போதும் ஒரு முக்கியமான வீரர். அவர் தனது சுய நலத்தைத் தாண்டி எப்போதும் அணிக்காக விளையாடும் மிகச்சிறந்த மனிதர். எங்கள் இலக்கை அடைய நாங்கள் இருவரும் இணைந்து கடுமையாக உழைப்போம்," என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ராகுல், "நன்றி, வரும் சீசனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.