அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அதிமுக வழக்கு: விரைவில் விசாரணை
சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 10-ந்தேதி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளது.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இரட்டை இலை அல்லது சுயேச்சை சின்னத்திற்குப் பதிலாக தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டனர். பதிலுக்கு தி.மு.க.வினர் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டனர். சுமார் 70 லட்சம் ரூபாய் பணப்பட்டுவாடா மூலம் வாக்குகள் மாற்றப்பட்டுள்ளது என்று அவதூறாக பேசியுள்ளார்.
எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க.வுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மேலும். அ.தி.மு.க. தொண்டர்களை தனது கட்சிக்கு இழுக்கும் நோக்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். எனவே, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனு வருகிற 21-ந்தேதி விசாரணைக்கு வரவுள்ளது.