📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 16, 2026 06:03 PM

வடகிழக்கு பருவமழை எதிரொலி; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

வடகிழக்கு பருவமழை எதிரொலி; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

வடகிழக்கு பருவமழை எதிரொலி; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

பள்ளி வளாகத்தில் நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி மற்றும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் இருக்கும்பட்சத்தில் அவை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

Published : October 16, 2026 at 5:39 PM IST

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது என வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடப்பாண்டில் இயல்பான அளவில் மழை இருந்தாலும், எல் நினோ வருடம் என்பதால் குறைந்த நேரத்தில் அதிகளவில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் லதா, தொடக்க கல்வித்துறை இயக்குநர் நரேஷ், தனியார் பள்ளிகள் இயக்குநர் சுகன்யா ஆகியோர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், "பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் வெப்பக்காலம் மற்றும் மழைக்காலங்களில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பிற்கென உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பள்ளி பாதுகாப்பிற்கென ஆய்வு அலுவலர்களும், பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். மாணவர்கள் வசிக்கும் வீடுகளிலும் சுற்று வட்டாரங்களிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மேலும், மழை நீர் தேங்குவதால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்பதை உணர்த்த வேண்டும்.

காய்ச்சிய நீரைப் பருக அறிவுறுத்த வேண்டும்

பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி மற்றும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் இருக்கும்பட்சத்தில் அவை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா? என்று உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் கனமழையால் நீர் தேங்கும் காலங்களில் நீர் இறைக்கும் இயந்திரம் (மின் மோட்டார்) உள்ளாட்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இதர அலுவலகங்களில் உள்ளதா? என்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்து வைத்தல் அவசியம்.

பள்ளிக்கு அருகில் ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகள் இருப்பின், மழைக்காலங்களில் இவற்றிற்கு அருகில் குழந்தைகள் செல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது மழைநீர் கால்வாய்கள் பாதாள சாக்கடைக் குழிகள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்ல அறிவுறுத்துவதுடன், அதனை தவிர்க்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மின்சார பாதுகாப்பு

அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும். தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இது போன்ற நேரங்களில் மின்வாரிய ஊழியர்களை உடனடியாக தொடர்புகொண்டு சரிசெய்திட வேண்டும். மின் மோட்டார்கள் அமைந்துள்ள இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா? என்பதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது மின்கம்பி வடம் பதிப்பதற்கான பள்ளம் தோண்டியுள்ள பகுதிகளுக்கு அருகாமையில் செல்வதோ கூடாது என எச்சரிக்கை செய்து அதனை பெற்றோர்கள் மூலமாக அறிவுரை வழங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின்அழுத்தமுள்ள மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின்அவைகளை உடனடியாக மின்வாரியத்தின் துணையுடன் அகற்றிட வேண்டும்.

பள்ளி வகுப்பறையில் உள்ள சுவிட்சுகள் (switches) சரியாகவும், மழைநீர் படாத வகையில் உள்ளனவா? என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும். பழுதடைந்த சுவிட்சுகள் உள்ள இடங்களில் மழைக்காலங்களில் மின்சாரம் செல்வதை தடைசெய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர் பாதுகாப்பு

தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவர் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் இருப்பின் அப்பகுதிக்கு மாணவர்கள் அருகில் செல்லாமல் இருக்க சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும். மழையின் காரணமாக பள்ளியின் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருப்பின், அத்தகைய வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளை பயன்படுத்தாமல் பூட்டிவைக்க வேண்டும்.

பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் மேற்கூரைகள். கைப்பிடிச்சுவர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் சன்னல்கள். கதவுகளுக்கு மேல் உள்ள வெயில் மறைப்பு சுவர்கள் உறுதியை ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காத வகையிலும், தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் இருப்பின் வட்டார வளர்ச்சி அலுவலகம், பொதுப்பணித்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு அக்கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இடிக்காவிட்டால், அந்த கட்டடத்திற்கு அருகில் செல்லாமல் இருக்க தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

மாணவர்கள் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுரைகள் வழங்க வேண்டும். மழைக் காலங்களில் மாணவர்களும், அவர் தம் உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்கவேண்டும். மழைக்காலங்களில் இடி, மின்னல் போன்வற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த ஆண்டு சூப்பர் எல்நினோ போன்ற நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக காலநிலை வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, அவ்வப்போது மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையம் (District Emergency Operation Centre), TN Alert , Sachet மொபைல் செயலிகள் மூலம் மாவட்டத்தின் வானிலை நிலவரத்தை உடனுக்குடன் அறிந்து, சார்ந்த மாவட்ட ஆட்சியர் வழங்கும் அறிவுரைகளையும் பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.