📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 27, 2026 04:01 AM

 உயர் மதிப்பு வணிகத்தை குறிவைக்கும் டிவி'ஸ் லேபரட்டரீஸ்

 உயர் மதிப்பு வணிகத்தை குறிவைக்கும் டிவி'ஸ் லேபரட்டரீஸ்

முன்னணி பார்மா நிறுவனமான டிவி'ஸ் லேபாரட்டரீஸ், மருந்துகளுக்கான மூலப்பொருட்கள், ஒப்பந்த அடிப்படையிலான மருந்து தயாரிப்பு (கஸ்டம் சிந்தசிஸ்), தனிப்பயன் மருந்துகள், ஊட்டச்சத்து பொருட்கள் என பல்வேறு பிரிவுகளில் வணிகம் செய்கிறது.

ஒரு வழக்கமான மருந்து நிறுவனமாக அல்லாமல், உலகளாவிய பார்மா நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள், வேதிப்பொருட்கள் மற்றும் சிக்கலான நவீன மூலக்கூறுகளை பிரத்யேகமாக வழங்கி வருகிறது. மேலும், இதன் வர்த்தகம் ஏற்றுமதியை சார்ந்து வலுவாக உள்ளது.

கடந்த 2025-26ம் நிதியாண்டில், இதன் விற்பனையில் ஏற்றுமதிக்கு 89 சதவீத பங்கு உள்ளது. வளர்ச்சி தரக்கூடிய கஸ்டம் சிந்தசிஸ், பெப்டைட்ஸ், கான்ட்ராஸ்ட் மீடியா ஆகிய தயாரிப்புகளில் கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

வணிக பங்களிப்பு

கடந்த ஜூன் காலாண்டில், நிறுவனத்தின் வருவாயில் கஸ்டம் சிந்தசிஸ் பிரிவின் பங்கு கிட்டத்தட்ட 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே வலுவான லாபத்துக்கு முக்கிய காரணமாகவும் இருந்தது. மீதமுள்ள 40 சதவீத வருவாய் ஜெனரிக்ஸ் மற்றும் ஏ.பி.ஐ., பிரிவு வாயிலாக கிடைத்துள்ளது. செயல்பாட்டு வருவாய் முந்தைய ஆண்டை விட 28 சதவீதம் உயர்ந்து 3,080 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 66 சதவீதம் உயர்ந்து 902 கோடி ரூபாயாகவும் உள்ளது.

'கஸ்டம் சிந்தசிஸ்'

புதிய மருந்துகளுக்கு காப்புரிமை பெற்ற சர்வதேச மருந்து கண்டுபிடிப்பு நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை பிரத்யேக ஒப்பந்த அடிப்படையில் ஆய்வு செய்து தயாரிப்பதே கஸ்டம் சிந்தசிஸ் முறை. சர்வதேச மருந்து கண்டுபிடிப்பு நிறுவனங்களுடன் டிவி'ஸ் நிறுவனம் கூட்டு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

பல்வேறு திட்டங்கள் ஆய்வு நிலையில் இருந்து முழு வர்த்தக வினியோகத்தை நோக்கி நகருகின்றன. டிவி'ஸ் நிறுவனத்தின் 18-20 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கிய நிலையில், மேலும் சில திட்டங்கள், மருத்துவ ஆய்வு மற்றும் அரசுசார் ஒப்புதல் கோரும் நிலைகளில் முன்னேறி வருகின்றன. தர ஏற்பு, ஒழுங்குமுறை அனுமதி மற்றும் ஆய்வு முடிவுகளை பொறுத்தே பெருமளவிலான வணிக வினியோகம் அமையும்.

'பெப்டைட்ஸ்'

உலகளவில் 'ஜி.எல்.பி.,-1' மற்றும் பிற பெப்டைடு சிகிச்சைகளுக்கு தேவை வேகமாக அதிகரிக்கிறது. எனவே, பெப்டைட்ஸ் பிரிவு டிவி'ஸ் நிறுவனத்துக்கு முக்கிய வணிக வியூகமாக மாறியுள்ளது. இதற்கென உயர்நிலை ஆய்வு மையத்தை உருவாக்கி, கட்டமைப்பு வசதிகளை உயர்த்தி வருகிறது. பெப்டைட்ஸ் மூலக்கூறுகள், திடநிலை பெப்டைடு தொகுப்பு, திரவநிலை தயாரிப்பு ஆகிய தொழில்நுட்பங்களிலும் உற்பத்தி வலிமையை கட்டமைத்து வருகிறது. இதற்கு சர்வதேச பார்மா நிறுவனங்களிடையே அதிக வரவேற்பு இருப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும், இதன் வணிக வருவாய் நடைமுறைக்கு வர கால அவகாசம் தேவை.

நிலையான அடித்தளம்

டிவி'ஸ் நிறுவனத்துக்கு ஜெனரிக்ஸ், ஏ.பி.ஐ., கான்ட்ராஸ்ட் மீடியா ஆகிய பிரிவுகள் நிலையான அடித்தளமாக இருந்து, கூடுதல் வாய்ப்புகளையும் தேடி தருகின்றன.

இப்பிரிவில், காப்புரிமை முடிந்த மற்றும் உலகளவில் அதிக தேவையுள்ள மருந்து வேதிப்பொருட்களை, சர்வதேச நிறுவனங்களுக்காக இந்நிறுவனம் பிரம்மாண்ட அளவில் உற்பத்தி செய்கிறது. நிறுவனத்தின் நிதிநிலைக்கு வலுவூட்டுவதோடு, பிரதான பணப்புழக்க ஆதாரமாக இப்பிரிவு நீடிக்கிறது.

கான்ட்ராஸ்ட் மீடியா என்பது மருத்துவ ஸ்கேனிங்கில் பயன்படும் சாயப்பொருட்கள் ஆகும். இது இந்நிறுவனத்துக்கு மற்றொரு வளர்ந்து வரும் முக்கிய வணிக வாய்ப்பாகும். 'அயோடின்' சார்ந்த கான்ட்ராஸ்ட் மீடியாவின் வினியோகம் ஏற்கனவே ஒரு வாடிக்கையாளருக்கு தொடங்கியுள்ள நிலையில், இரண்டாம் வாடிக்கையாளருக்கும் விரைவில் தொடங்கவுள்ளது. அதேநேரம், 'கடோலினியம்' சார்ந்த கான்ட்ராஸ்ட் மீடியா தயாரிப்புகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன.

டிவி'ஸ் தனது மூலதன விரிவாக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் 451 கோடி ரூபாய் முதலீட்டு சொத்துகள் பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன. நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு 3,611 கோடி ரூபாயாக வலுவாக உள்ளது. உயர் மதிப்பு தரக்கூடிய பிரிவுகளுக்கு மூலதன முதலீடுகள் ஒதுக்கப்படுகின்றன. இவ்வளவு முதலீடுகளுக்கு மத்தியிலும், கடனில்லா நிறுவனமாக டிவிஸ் நீடிக்கிறது.

கவனிக்க வேண்டியவை

1 ஒப்பந்த உற்பத்தி பிரிவில், வாடிக்கையாளரின் தர ஏற்பு, ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல்களே வணிக வருவாயை தீர்மானிக்கும்.

2 கடந்த ஜூன் காலாண்டில் வழக்கத்துக்கு மாறாக 68 சதவீத லாப வரம்பு பதிவானது. முழு ஆண்டுக்கான லாப வரம்பு இதைவிட குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 ஜெனரிக் ஏ.பி.ஐ., சந்தையில் தீவிர விலைப்போட்டி உள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வை ஈடுசெய்யவே அண்மையில் சில விலை உயர்வுகள் காணப்பட்டன. இது நிரந்தரமானதல்ல.

4 தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய மூன்று மாதங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை கையிருப்பில் வைத்துள்ளது. இது மூலதன தேவையை அதிகரிக்கிறது.

5 டிவி'ஸ் நிறுவன பங்கு அதன் கடந்த கால சராசரியை விட அதிக விலையில் வர்த்தகமாகிறது. இதை தக்கவைக்க, புதிய திட்டங்களை செயல்படுத்தி விற்பனையை தொடங்குவது அவசியம்.

அடுத்தகட்ட வளர்ச்சி

வரும் 2027-28ம் நிதியாண்டுக்குள் மூன்று ஒப்பந்த உற்பத்தி திட்டங்களில் உற்பத்தியை தொடங்குவதும், பெப்டைட்ஸ் உற்பத்தி திறனை விரிவாக்குவதுமே, நிறுவனத்தின் வருவாய் உயர்வுக்கு உந்துசக்தியாக இருக்கும்.

சோதனை நிலையில் உள்ள திட்டங்கள் வணிகமாக மாறுகிறதா என்பதையும், அசாதாரண லாப வரம்பு இயல்புக்கு திரும்புகிறதா என்பதையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். எனினும், டிவி'ஸ் பங்கு மிக அதிக விலையில் வர்த்தகமாவதால், முதலீட்டாளர்கள் கூடுதல் பலன் தரக்கூடிய வேறு நிறுவன பங்குகளையும் பரிசீலிக்க வாய்ப்புள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ, எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம்; வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.