📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 27, 2026 04:01 AM

வளர்தமிழ் இயக்கம்: சிங்கப்பூர் தமிழில் பங்களிப்போர் பாராட்டு

வளர்தமிழ் இயக்கம்: சிங்கப்பூர் தமிழில் பங்களிப்போர் பாராட்டு

சிங்கப்பூரில் தமிழ்மொழியை வாழும் மொழியாகத் தக்கவைக்க அரும்பாடுபடும் இணை அமைப்புகள், தொண்டூழியர்ளுக்கு நன்றி நவில வளர்தமிழ் இயக்கம் அண்மையில் ஒரு பாராட்டு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

சிவில் சர்வீஸ் கிளப் வளாகத்தில் கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற இந்நிகழ்ச்சி, தமிழ்மொழி விழாவின் 20வது பதிப்பு, தமிழ் இளையர் விழாவின் 6வது பதிப்பு ஆகியவற்றின் சிறப்பான வெற்றியைக் கொண்டாடும் நோக்கில் அமைந்தது.

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆலோசகர் குழுத் தலைவருமான திரு விக்ரம் நாயர் சிறப்பு இரவு விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

“ஒரு சமூகத்தின் அடையாளம் அதன் மொழி. நமது மொழி நமது அடையாளம் என்பதால், அதனைப் பேணி வளர்த்து, வருங்காலத் தலைமுறையினரிடம் கொண்டுசேர்ப்பது நம் அனைவரின் கடமை,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் தமிழ் ஒரு வாழும் மொழியாகத் திகழ வேண்டும் என்ற அவர், நம் மாணவர்கள், இளைய தலைமுறையினர் தமிழைப் பயன்படுத்துவதோடு அதன்மீது ஆர்வமும் பற்றும் கொண்டிருப்பதை உறுதிசெய்வதும் மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்டார்.

“ஓய்வு பெற்று வீட்டில் இருக்கலாம் என்று நினைத்த காலத்தில், தமிழ்தான் என்னைச் சுறுசுறுப்பாக இயக்கிக்கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகள் தொடர்ந்து விழா இயங்குவதற்கு மக்களின் பேராதரவும் இணை அமைப்புகளின் திட்டமிடலுமே காரணம்,” என்றார் வளர்தமிழ் இயக்கத் தலைவர் நசீர் கனி.

அடுத்த ஆண்டிற்கான தமிழ்மொழி விழாவின் புதிய கருப்பொருள் ‘உணர்வு’ என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அதன்மூலம் மக்கள் தமிழைத் தங்கள் மனமார்ந்த உணர்வாக ஏற்றுப் பேசத் தூண்டுவதே நோக்கம் என்றும் குறிப்பிட்டார். உணர்வுபூர்வமான செயல்பாடுகளுடன் தமிழ் அமைப்புகளும் தமிழும் ஒன்றிணைந்து செயல்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய சிந்தனைகளைத் தழுவி, மக்களின் மனங்களைத் தொடும் வகையிலான நிகழ்ச்சிகளைப் படைத்து, சிங்கப்பூர் மக்கள் அன்றாட வாழ்வில் தமிழைப் பேசுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட இக்கருப்பொருள் சிறந்த ஊக்கமாக அமையும் என்றும் அவர் கூறினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

நிகழ்ச்சியில் 2026 முதல் 2029ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கான வளர்தமிழ் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டனர்.

புதிய உறுப்பினர்களாக குடும்ப மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் சரவணன் சண்முகமும் பகுப்பாய்வாளரான வெள்­ளி­நிலா குணாளனும் இணைந்துள்ளனர்.

அதேவேளையில், திரு பிலவேந்தர்ராஜ் சுந்தர் ஆரோக்கியராஜ், திரு நாராயணன் வேலாயுதம், திரு தவனேசன் சிவானந்தன் ஆகியோர் உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்மொழி விழா, தமிழ் இளையர் விழாக்களில் நெறியாளராகவும் தொண்டூழியராகவும் பங்காற்றிய அனுபவம் கொண்ட டாக்டர் சரவணன், தேசிய மொழிபெயர்ப்புக் குழுவிலும் நான்கு ஆண்டுகள் உறுப்பினராகச் சேவையாற்றியுள்ளார்.

“ஓர் இளைய உறுப்பினராக, இளையர்களின் கண்ணோட்டத்தில் புதிய சிந்தனைகளையும் யோசனைகளையும் இயக்கத்திற்கு வழங்க முயல்வேன்.

“தொழில் சார்ந்து நாம் வளர்ச்சி காணும்போது இயல்பாக மொழி மீதான ஈடுபாடு குறையக்கூடும். ஆனால், நம் தொழிலோடு மொழியையும் இணைத்து நாம் எப்படி மேன்மையடையலாம் என்பதை இளையர்களுக்கு உணர்த்துவதே என் நோக்கம்,” என்று அவர் கூறினார்.