உக்ரைனுக்கு புதிய அதிபரை தேர்வு செய்யும் நேரம் இது: டொனால்டு டிரம்ப்
வாஷிங்டன்: “உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தற்போதைய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தவறிவிட்டார். எனவே, அந்நாட்டு மக்கள், புதிய அதிபரை தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டது,’’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, துருக்கி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயன்று வருகின்றன.
அதே சமயம், மேற்காசிய நாடான ஈரானுடன் நடத்தி வரும் போர் காரணமாக, அமெரிக்காவில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதை சமாளிக்கும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து டீசல் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டுள்ளார். மேலும், ரஷ்யா பிற நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்வதற்கான தடையையும் நீக்கினார். இதற்கு முன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா போன்ற நாடுகள் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், உக்ரைனுக்கு எதிரான போருக்கு மறைமுகமாக உதவி வருவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார். இதனால், இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிப்பதற்கான சட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டு பார்லி.,யில் தாக்கல் செய்திருந்தார்.
தற்போது, அந்த நிலைப்பாட்டில் இருந்து அவர் தலைகீழாக மாறியிருப்பது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கவலை அடைய வைத்துள்ளது. ‘ரஷ்யா மீதான எரிபொருள் ஏற்றுமதி தடையை நீக்கி, போரை மேலும் பல ஆண்டுகளுக்கு நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவி இருக்கிறார்’ என ஜெலன்ஸ்கி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் கடந்த 2022ல் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி இருக்காது. இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்குவதற்கு எந்தக் காரணமும் இல்லை. உக்ரைன், தன் நாட்டின் 30 சதவீத பகுதியை இழந்துவிட்டது. இருதரப்பிலும் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்; 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அமைதியை ஏற்படுத்தக்கூடிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தவறிவிட்டார். எனவே, புதிய அதிபரை உக்ரைன் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்கள் நாட்டில் நடக்கும் போருக்கு ரஷ்யா மட்டுமே காரணம். இங்குள்ள எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா நிறுத்த வேண்டும். அப்போது தான், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நாங்களும் நிறுத்துவோம். ஆனால், ரஷ்ய அதிபர் புடின் அதை விரும்பவில்லை. போர் நிறுத்தம் என்பது பரஸ்பர ஒப்புதலுடன் இருக்க வேண்டும்.- வோலோடிமிர் ஜெலன்ஸ்கிஉக்ரைன் அதிபர்