தயாரிப்பாளரான நெப்போலியன் மகன்.. ’அமெரிக்கா ஆவி’ ஆடியோ லான்ச்சில் நெப்போலியன் பேச்சு!
சென்னை: ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் தயாரிப்பில் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் உருவான 'அமெரிக்க ஆவி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இத்திரைப்படத்தின் இசையை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணைத் தூதர் டாக்கா ஹாசி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார்.
ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தை பற்றியும் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தது பற்றியும் நெப்போலியன் பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அமெரிக்க ஆவி படத்தின் ஆடியோ லான்ச்:
அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமெரிக்க ஆவி' திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர். 'நேஷ் வில்' பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கிறார். வினு படத்தொகுப்பு பணிகளையும், இந்து ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். காமெடி ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஜீவன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையுடன் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட விழா, சென்னையில் உள்ள கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நடிகர் நெப்போலியன் நெகிழ்ச்சி பேச்சு:
ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் நெப்போலியன் பேசுகையில், "இந்த திரைப்படத்தில் ஆண்டோ, தியான், அர்லூ, பிரேமா, பிஜூ, மகேஷ், பப்லு, அருண் ஆண்டனி, சாம் ஆண்டோ, பிரகாஷ், ஐஸ்வர்யா, ராஜ்குமார், இந்து ராஜ்குமார், ராகுல், ஹேமமாலினி, ஊர்வசி, மைதிலி என தோராயமாக 200 பேர் புதுமுகங்களாக அறிமுகமாகியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே இந்த நிகழ்விற்காக இங்கு வருகை தந்துள்ளனர்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதில் நடித்திருக்கும் அனைவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் என பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்புகளில் பணியாற்றுபவர்கள். அவர்கள் ஒதுக்கித் தரும் நேரத்தைப் பயன்படுத்தி, 75 நாட்களில் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். திங்கள் முதல் வெள்ளி வரை அனைவரும் பரபரப்பாக இயங்குவார்கள். அதில் அவர்கள் எங்களுக்காக ஒதுக்கித் தரும் நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டு அந்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
"இது மிகவும் கடினமான விஷயம். அமெரிக்காவில் இதுவரை சினிமா படப்பிடிப்பை நேரில் வேடிக்கை பார்க்காதவர்கள் எல்லாம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நானும், இயக்குநரும் பயிற்சி கொடுத்து இதில் நடிக்க வைத்திருக்கிறோம். சிவாஜி கணேசன் சார் நடித்த 'பாரத விலாஸ்' படத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் நடித்திருப்பார்கள். இதில் உலகம் முழுவதிலும் உள்ள 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடித்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்தப் படம் மிகவும் வித்தியாசமானதாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"1994-ஆம் ஆண்டில் சன் டிவி நேரலைக் காட்சி தொடங்கியபோது, நானும் இயக்குநர் பாண்டியராஜனும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவிற்குச் சென்று தொடங்கி வைத்தோம். அன்று முதல் எங்களுக்குள் ஏற்பட்ட நெருங்கிய நட்பு இன்று வரை நீடிக்கிறது. அவர் இங்கு வந்து எங்கள் படக்குழுவை வாழ்த்தியதற்கு நன்றி. மேலும் இங்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்" என நெப்போலியன் பேசினார்.