ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது : டில்லி கம்பன் கழகத்தில் கருத்து
ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது : டில்லி கம்பன் கழகத்தில் கருத்து ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று டில்லிக் கம்பன் கழகக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பல்வேறு அறிஞர்களும் கருத்துத் தெரிவித்தார்கள். டில்லி கம்பன் கழகத்தின் சார்பில் கடந்த சனிக்கிழமையன்று லோதி சாலையில் அமைந்துள்ள ரமண கேந்திரா கலையரங்கில் 'கணினி தலைமுறையும், கன்னல் தமிழும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு டில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனர் - தலைவர் கே வி கே பெருமாள் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது அவர், ' தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தமிழின் பெருமைகளை எடுத்துச் சொல்லி, தமிழ் மொழியை நிலைநிறுத்தத் செய்வதே இந்த கருத்தரங்கின் நோக்கம் ' என்றார். கருத்தரங்கினைத் தொடங்கி வைத்துப் பேசிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் இரா. அறவேந்தன், 'முன்பு அச்சு வடிவில் படிக்கப்பட்டு வந்த இலக்கியத்தை இப்போதுள்ள ஜென்ஸி தலைமுறையினர் மின் ஊடகங்கள் வாயிலாக வாசிக்கின்றனர். இலக்கியங்களை மின் ஊடகங்களில் படைக்கின்றனர். இவற்றால் தமிழின் வளம் கூடுகிறது. அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு ஒரு புதிய தளத்தை தமிழுக்கு உருவாக்கி உள்ளது. அதனால், தமிழுக்குப் பலன் கிடைத்திருக்கிறது ' என்றார். மேலும்,' தமிழ் மேடைகளில் மூத்தவர்கள் இடம் பெறுவது அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளையில், இளைஞர்களுக்கும் உரிய வாய்ப்புகளை வழங்குவதற்குத் தமிழ் அமைப்புகள் முன்வர வேண்டும் ' என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியின் பேராசிரியர் ச. சீனிவாசன், உதவிப் பேராசிரியர் முனைவர் கே. சுரேஷ், தில்லிப் பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகள் மற்றும் இலக்கியப்புலத் துறையின் பேராசிரியர் தி. உமாதேவி, காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் நா.காளிதாசம்மாள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் எழுத்தாளரும், வரலாற்றுப் பட இயக்குனருமான முனைவர் ரவி குணவதி மைந்தன், டில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் ஜி. சிவபாலமுருகன், துணைத் தலைவர் செல்வராஜ் மகேந்திரன், உச்சநீதிமன்றத் தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகத்தின் செயலாளர் அ.சி. அறிவழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 'இப்போதுள்ள சூழ்நிலையில் இது போன்ற கருத்தரங்கங்கள் மிகவும் அவசியம் ' என்று குறிப்பிட்ட அவர்கள், அதனை முன்னெடுத்திருக்கும் டில்லிக் கம்பன் கழகத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் கவிஞர் ஜனக்புரி சீனிவாசன் வாழ்த்துப்பா வாசித்தார். கருத்தரங்கில் நிறைவுச் சிறப்புரையாற்றிய, புதுச்சேரி மாநில குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சரும், புதுச்சேரி கம்பன் கழகத்தின் செயலாளருமான வே.பொ. சிவக்கொழுந்து, ' புதுச்சேரி கம்பன் கழகத்தில் ஒரு சாதாரண நிலையில் இருந்து, செயலாளர் பொறுப்பிற்கு வந்தேன். கம்பனுக்குப் பணி செய்வதால் அறவழியில் பொருள் ஈட்ட வேண்டும் என்பதையும், அவ்வாறு ஈட்டுகிற வருவாயில் ஒரு பகுதியை ஏழை, எளிய மக்களின் கல்விக்காகச் செலவிட வேண்டும் என்பதையும் கொள்கையாகக் கொண்டுள்ளேன். மேலும், உலகம் முழுவதும் கம்பன் கழகங்கள் தோன்றி தமிழையும், அறத்தையும் வளர்க்க வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதும் பயணித்து, கம்பன் கழகங்களை ஊக்குவித்து வருகிறேன். அந்த வகையில், தலைநகரில் சிறந்த தமிழ்ப்பணி ஆற்றி வரும் தில்லிக் கம்பன் கழகத்தின் நிர்வாகிகளைப் பாராட்டுவதோடு, டில்லி கம்பன் கழகத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் ' என்றார். அவரது சேவைகளைப் பாராட்டி அவருக்குப் பாராட்டுக் கேடயம் வழங்கப்பட்டது. முன்னதாக இசைக் கலைஞர் ஹரிணி முரளி, கம்பராமாயணத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடினார். கம்பன் கழகச் செயலாளர் எஸ் பி முத்துவேல் வரவேற்றுப் பேசினார். இணைச் செயலாளர் அ. புகழேந்தி நன்றியுரை நல்கினார். குரல் கலைஞர் உஷா வெங்கட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் . தில்லிக் கம்பன் கழக செயற்குழு உறுப்பினர்கள் சிவராமகிருஷ்ணன், பா. குமார், ஏ.எம். ஆறுமுகம், தில்லிப் பல்கலைக் கழகத்தின் ராம்பிரகாஷ் மற்றும் சமூக ஆர்வலர்கள் சு.தாமோதரன், கோபால் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர் .- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்