📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 17, 2026 07:31 PM

தமிழ்நாட்டு ரோஹித் வெமுலாவை உருவாக்குகிறதா தவெக அரசு? கண்ணீர் சிந்தும் மாணவர்..!

தமிழ்நாட்டு ரோஹித் வெமுலாவை உருவாக்குகிறதா தவெக அரசு? கண்ணீர் சிந்தும் மாணவர்..!

தமிழ்நாட்டு ரோஹித் வெமுலாவை உருவாக்குகிறதா தவெக அரசு? கண்ணீர் சிந்தும் மாணவர்..!

வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை தொடர்பாக மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழ்நாடு மாணவர் பாரதிதாசன், தனக்கான ஆராய்ச்சி நிதி தொடர்பாக அரசு தரப்பில் இருந்து உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். கண்ணீர் மல்க அவர் பேசியுள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

யார் இந்த பாரதிதாசன்?

மலேசியாவின் தேசியப் பல்கலைக்கழகத்தில் Ph.D. படித்து வரும் பாரதிதாசன், திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். தனது குடும்பத்திலும், சொந்த ஊரிலும் இருந்து உயர்கல்வி ஆராய்ச்சிக்குச் சென்ற முதல் தலைமுறை மாணவர் என அவர் கூறியுள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அவரது படிப்புக்கு நிதியுதவி வழங்க அரசு ஒப்புதல் அளித்திருந்தது. முதல் ஆண்டுக்கான நிதி வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் ஆண்டு தொடர்பான நிதியில் தாமதம் ஏற்பட்டதாக அவர் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தார்.

சட்டசபை வரை சென்ற விவகாரம்!

உதவித்தொகை கிடைக்கவில்லை என பாரதிதாசன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் எழுந்தது. இதற்கு சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு விளக்கம் அளித்தார்.

அரசு தரப்பின் விளக்கப்படி, பாரதிதாசனுக்கு ஏற்கெனவே ரூ.48.22 லட்சம் வரை நிதி வழங்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டுக்கான செலவினங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் உரிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாததால் அடுத்தகட்ட நிதி தொடர்பாக சிக்கல் ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் விதிமுறைகளின்படி அடுத்தகட்ட நிதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“ஆவணங்களை அனுப்பிவிட்டேன்!”

அமைச்சரின் விளக்கத்துக்குப் பிறகும் தனது பிரச்னை தீரவில்லை எனக் கூறி பாரதிதாசன் மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். தான் ஏற்கெனவே தேவையான ஆவணங்கள், ரசீதுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டதாகவும், பல்கலைக்கழகம் வழியாகவும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசு தரப்பில் கேட்கப்படும் விளக்கங்களுக்கு தொடர்ந்து பதில் அளித்தும், ஆராய்ச்சிக்கான நிதி கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://x.com/Milton_Off/status/2100504247142060456?s=20

“என் ஆராய்ச்சியே முடங்கிடுச்சு!”

நிதி கிடைக்காததால் தனது Ph.D. ஆராய்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக பாரதிதாசன் கூறியுள்ளார். ஆய்வுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக கட்டணம் மற்றும் பிற செலவுகளை சமாளிப்பதிலும் சிரமம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது ஆராய்ச்சிக்குத் தேவையான பொருட்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“என்னை இப்படியே டார்ச்சர் பண்ணாதீங்க!”

வீடியோவில் தனது குடும்பப் பின்னணி குறித்தும் பாரதிதாசன் பேசியுள்ளார். தனது குடும்பத்தில் இதற்கு முன்பு யாரும் இதுபோன்ற உயர்கல்வி ஆராய்ச்சிக்குச் சென்றதில்லை என்றும், தனது கிராமத்தில் இருந்து மருத்துவ ஆராய்ச்சிக்காக வெளிநாடு சென்ற முதல் தலைமுறை மாணவர் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது படிப்பைத் தொடர முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அரசு உதவி வழங்க முடியாது என்றால் அதை நேரடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

“வேறு வழியில் நிதி தேடி என் படிப்பைத் தொடர்கிறேன். ஆனால் என்னை மனதளவில் பாதிக்கும் வகையில் தொடர்ந்து இழுத்தடிக்க வேண்டாம்” என்பதே அவரது வேண்டுகோளாக உள்ளது.

ரோஹித் வெமுலாவை குறிப்பிட்ட பாரதிதாசன்

தனது வீடியோவில் மறைந்த ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா விவகாரத்தையும் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். தனக்கு தற்போது ஏற்படும் மன அழுத்தமான சூழ்நிலையை, ரோஹித் வெமுலா எதிர்கொண்ட காலகட்டத்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். அப்போது அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்கள் செயல்பட்ட விதம் குறித்த சர்ச்சைகளைச் சுட்டிக்காட்டிய அவர், அதேபோன்ற அணுகுமுறை தன்னிடமும் இருப்பதாக தனது குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார்.

எனவே, ஒரு மாணவரின் கல்வியும் ஆராய்ச்சியும் பாதிக்கப்படாமல் இந்த விவகாரத்துக்கு விரைவாகத் தீர்வு கிடைக்குமா என்பதே தற்போது கவனிக்கப்படும் விஷயமாக உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ரோஹித் வெமுலாவை உருவாக்குகிறதா தவெக அரசு என்று மாணவனுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.