செயற்கை நுண்ணறிவு: நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம்
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும் என்பது குறித்து நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மனிதவள தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் வலியுறுத்தியுள்ளார்.
ஊழியர்கள் அமைதியாக இருப்பதை அவர்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்று தவறாகக் கருதிவிடக்கூடாது. வேலைநீக்கம், ஆட்குறைப்பு குறித்து நிறுவனத்தின் திட்டங்களை ஊழியர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். தானியக்கமாக்கல், அதற்கு தேவைப்படும் மறுபயிற்சிகள் குறித்து நிறுவனங்கள் ஊழியர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கவேண்டும் என்றார் அவர்.
ஏஐ தொழில்நுட்பம் குறித்து ஊழியர்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கவும், நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும் உருவாக்கப்பட்டுள்ள ஓர் உயர்மட்டத் தொழில் துறை தளமான ‘எஸ்ஜி ஏஐ எக்ஸ்சேஞ்ச்’ தொடக்க விழாவில் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணைமைச்சருமான திருவாட்டி லாவ் உரையாற்றினார்.
வணிகச் சூழல் பலவீனமாக இருப்பதால் ஆட்குறைப்பு செய்யும்போது, ஊழியர்கள் அதை செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்ட மாற்றம் என்று தவறாகப் புரிந்துகொள்ளாமல் இருக்க தெளிவான உரையாடல் அவசியம் என்று அவர் கூறினார்.
சில தரப்பினரிடையே, குறிப்பாக இளையர்கள், மாணவர்களிடையே செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான மனநிலை நிலவுவதைச் சுட்டிய அமைச்சர், தங்களின் வேலைகளும் எதிர்கால ஆசைகளும் பறிபோய்விடுமோ என்ற பயமும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலையுமே இதற்கு முக்கியக் காரணம் என்றார்.
மக்களின் இந்த உண்மையான உணர்வுகளையும் அச்சத்தையும் அலட்சியப்படுத்த முடியாது. சிங்கப்பூர் சமுதாயத்தை ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்க அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டும் என்று திருவாட்டி லாவ் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றவில்லை. சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு உண்மையான மதிப்பை உருவாக்கவும், ஊழியர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகளை வழங்கவும், மக்களுக்குச் சிறந்த சேவைகளை அளிக்கவும் மட்டுமே இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசு விரும்புகிறது என்றார் அவர்.
பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் தேசிய செயற்கை நுண்ணறிவு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. நிதி, உற்பத்தித் துறைகள் உட்பட சிங்கப்பூரில் தற்போது கிட்டத்தட்ட 100 ஏஐ சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஆந்த்ரோபிக் நிறுவனம் அடுத்த மாதம் சிங்கப்பூரில் அலுவலகம் திறக்கவுள்ளது. கூகுள் கிளவுட் பொறியியல் மையத்தைத் தொடங்கியுள்ளது. டேட்டாபிரிக்ஸ் அடுத்த மூன்றாண்டுகளில் US$350 மில்லியனுக்கு மேல் முதலீடு செய்யவுள்ளது என்று ஏஐ சார்ந்த வளர்ச்சிகளை அவர் பட்டியலிட்டார்.
நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும், அதேவேளையில் ஊழியர்கள் இம்மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை உயர்த்திக்கொள்ளவும் அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என்று அமைச்சர் ஜாஸ்மின் லாவ் உறுதியளித்தார்.