துள்ளி வந்த விஜய்... அள்ளி அணைத்த அஜித்!
துள்ளி வந்த விஜய்... அள்ளி அணைத்த அஜித்!
அந்த ஊர் போலீஸ்காரர்களைப்போலவே, புகழ்பெற்ற லீ மேன்ஸ் கோப்பைக்காக நடைபெறும் அந்தப் போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்த 90 ரேஸர்களுக்கும் தங்களோடு ரேஸில் கார் ஓட்டப்போகிறவர் இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு சினிமா ஸ்டார் என்பது அப்போதுதான் தெரியவந்தது.
ஃபார்முலா 1 கார் பந்தயம் தொடங்கி பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரிக்ஸ் வரை பல கார் பந்தயங்களைப் பார்த்திருக்கிறது, லண்டனிலிருந்து 100 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தய மைதானம். ஆனாலும் கடந்த சனிக்கிழமை, திருவிழாவுக்குத் திரளும் கூட்டத்தைப்போல தொலைதூர ஊர்களிலிருந்தெல்லாம் அங்கே பெரும் கூட்டம் திரண்டது. `இன்றைக்கு என்ன அப்படி ஒரு சிறப்பு... ஏன் இவ்வளவு கூட்டம் குவிகிறது?' என்று தெரியாமல் உள்ளூர் மக்கள், போலீஸார் என்று எல்லோருமே குழம்பித்தான் போனார்கள்.
கூட்டத்தில் பெரும்பாலும் இந்தியர்கள்... குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் இருப்பதைப் பார்த்தபோதுதான், ‘தமிழ் சினிமாவின் ஹீரோ அஜித்குமார் கார் பந்தயத்தில் கலந்துகொள்கிறார். அதை இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கிவைக்கப்போகிறார்’ என்று அவர்களுக்குத் தெரிந்தது.
கார் பந்தய வர்ணனையாளர்களில் ஒருவர், அஜித்தையும் விஜய்யையும் பார்க்க இங்கிலாந்தில் இருக்கும் ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஏன் திரண்டு வந்திருக்கிறார்கள் என்பதை மற்ற பார்வையாளருக்குப் புரியும்விதமாக இப்படிக் கூறினார்... ``ஏராளமான ரசிகர்களைக்கொண்ட பிராட் பிட்டும், டாம் க்ரூஸும் ஒரே நேரத்தில், ஒரே இடத்துக்கு வந்தால் எப்படி இருக்குமோ... அப்படிப்பட்ட ஒரு தருணம் இது.''
முதல்வர் விஜய் அன்று Segway எனப்படும் பேட்டரி வாகனத்தில் வட்டமடித்து விளையாடி மகிழ்ந்ததும், அஜித்தைக் கண்டதும் துள்ளியபடி ஓடிவந்து கட்டி அணைத்துத் தோளில் முத்தம் கொடுத்ததும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகின.
அபாயகரமான 18 வளைவுகளைக்கொண்ட அந்த 5.891 கி.மீ பந்தயப் பாதையை (LAP) அன்று மணிக்கு 168 கிலோமீட்டர் என்ற வேகத்தில் ஒரு முறை இரண்டு முறை அல்ல, 21 முறை கடந்தார் அஜித். இதில் கலந்துகொண்ட ரேஸர்களெல்லாம் நாடி, நரம்பு, ரத்தம், சதை, என்று அனைத்திலும் ரேஸ் ஊறிப்போன தொழில்முறைப் பந்தய வீரர்கள்.
இதில் மறைந்திருந்த ஆபத்து என்னவென்றால், இவர் பங்கேற்ற `LMP3 Pro/Am’ என்ற பிரிவில் இவரோடு பங்கேற்ற பத்து கார்கள் மட்டுமல்ல. `LMP3’, GT3 என வேறு இரண்டு பிரிவுகளில் கலந்துகொண்ட 34 கார்களும் அதே டிராக்கில் அஜித்தின் காருக்கு முன்னும் பின்னும் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தன. ஆம். ஓடுதளம் ஒன்றுதான் என்றாலும் ஒரே நேரத்தில்... ஒரே ஓடுதளத்தில்... வெவ்வேறு மூன்று போட்டிகள். பற்றாக்குறைக்கு ரேஸ் தொடங்கும்போது மழை பொழிந்து டிராக்கை ஈரமாக்கிக்கொண்டிருந்தது. மணிக்கு 160, 170 என்ற வேகத்தில் வளைந்து நெளிந்து செல்லும் அந்த டிராக் சற்று அசந்தாலும் சறுக்குமரமாக மாறி காரைத் திருப்பிப் போட்டுவிடும்.
15-வது இடத்திலிருந்து ரேஸைத் தொடங்கிய அஜித்தும் அன்று அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையைச் சந்தித்தார். 14 சுற்று (LAP) வரை ஒரே சீராகச் சென்றுகொண்டிருந்த அஜித்தின் கார் 15-வது சுற்றின்போது கட்டுப்பாட்டை இழந்தது. பெருவிபத்து நடக்கவிருந்த அந்தச் சூழலைச் சமாளித்து காரைத் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்ததுடன் தொடர்ந்து ரேஸில் பங்கெடுத்து மேலும் ஆறு சுற்றுகளை ஓட்டினார் அஜித். அதன் பிறகு அந்தப் பந்தயத்தின் விதிகளின்படி அஜித்தின் சக ஓட்டுநரான Romain Vozniak-க்கிடம் காரை ஒப்படைத்துவிட்டு இறங்கிவிட்டார். Romain ஓட்டும்போதும் சறுக்கு மரமாய் மாறியிருந்த பந்தயச் சாலை சவால் விடுத்தது. என்றாலும் குறிப்பிட்ட இரண்டு மணி நேர இடைவெளிக்குள் 28 சுற்றுகளை ஓட்டி வெற்றிகரமாக அஜித் குமார்/Romain Vozniak கூட்டணி ரேஸைப் பூர்த்திசெய்தது.
அஜித் பங்கேற்ற LMP3 Pro/Am பிரிவில் அவருக்குக் கிடைத்தது 10-வது இடம். அன்றைய பந்தயத்தில் வேறு பிரிவுகளில் கலந்து கொண்ட 44 கார்களையும் கணக்கில் எடுத்துப் பார்த்தால் அவரது அணிக்குக் கிடைத்தது 38-வது இடம். மழை, விபத்து என்று பல முட்டுக்கட்டைகள் வந்தபோதும் அஜித் டீம் அந்த ரேஸைக் குறிப்பிட்ட 2 மணி நேரத்துக்குள் பூர்த்தி செய்து புள்ளிகளும் பெற்றதுடன், அடுத்து போர்ச்சுக்கல்லில் நடக்கும் இறுதிப் போட்டியிலும் கலந்துகொள்ளத் தேர்வாகியிருக்கிறது.
அன்று நடந்த பந்தயத்தில் GT3 பிரிவின்கீழ் ஃபெராரி, மெக்லாரன், ஆஸ்டன் மார்டின், போர்ஷ் ஆகிய பல கோடி ரூபாய்க்கும் மேலாக மதிப்புகொண்ட கார்களும் பங்கேற்றன. ஆனால் உண்மையில் அஜித் ஓட்டிய கார்தான் அந்தக் கார்களைவிடவும் அதிக விலை மதிப்புகொண்டது. காரணம். அன்று போட்டியில் அஜித் ஓட்டிய Ligier JS P325 கார் என்பது ஷோரூம்களில் கிடைக்காது. எந்த நாட்டிலும், எந்தச் சாலைகளில் பார்க்க முடியாது. கார் பந்தயங்களுக்கேயான பிரத்யேகமான கார்.
வழக்கமாக இந்த கார் பந்தயம் இந்தியாவில் கவனம் பெறாது. விஜய்-அஜித் பங்கேற்றதால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் இந்தியர்கள் மத்தியில் கவன ஈர்ப்பைப் பெற்றுவிட்டது.