📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Malaysia Tamil October 02, 2026 05:00 PM

திருப்பி அனுப்பப்பட்டோருடன் மியன்மாரை நெருங்கும் கப்பல்

திருப்பி அனுப்பப்பட்டோருடன் மியன்மாரை நெருங்கும் கப்பல்

கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து கடற்படைக் கப்பல்கள்மூலம் திருப்பி அனுப்பப்பட்ட ஏறக்குறைய 1,500 மியன்மார் குடிமக்கள் இன்னும் சில நாள்களில் மியன்மாரின் வணிக மையமான யங்கூனை அடைவார்கள் என்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) அந்நாட்டின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரில் தீவிர உள்நாட்டுப் போர் நடந்து வரும் சூழலில் நாடு திரும்புவோர் ஆபத்தை எதிர்நோக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமைக் குழுக்களும் எச்சரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று மியன்மார் கடற்படைக் கப்பல்கள் 1,476 மியன்மார் குடிமக்களை அக்டோபர் 1ஆம் தேதி மியன்மார் கடற்பரப்பிற்குள் அழைத்து வந்ததாக ‘குளோபல் நியூ லைட் ஆஃப்’ மியன்மார் நாளேடு தெரிவித்தது.

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காகவும் குடிநுழைவு விதிமுறைகளை மீறியதற்காகவும் தண்டனை அனுபவித்த பின்னரே அவர்கள் மலேசியக் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களிலிருந்து தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இது, அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் நடப்பதாக மலேசியா கூறுகிறது.

எனினும், மியன்மாரில் உள்ள தற்போதைய சூழ்நிலைகள் அகதிகள் பாதுகாப்பாகவும் நிலையாகவும் திரும்புவதற்குச் சாதகமாக இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.

மியன்மார் மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் சிறப்பு அதிகாரியான கெல்லி ஈ. கர்ரி, தான் மிகவும் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்தார். மலேசியா, மியன்மார் குடிமக்களைத் தாயகத்திற்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு அவர்களுக்கான சூழ்நிலைகளைச் சரிசெய்ய ஐநாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

2021ல் நடந்த ராணுவப் புரட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து மியன்மாரில் பதற்றம் நீடித்து வருகிறது. இதையடுத்து வறுமையில் உள்ள அந்தத் தென்கிழக்கு ஆசிய நாட்டில் உள்நாட்டுப் போர் மூண்டது.

கடல் பயணத்தின்போது நாடு திரும்புவோருக்கு மருத்துவ உதவி, உணவு, உடைகளை கடற்படை வீரர்களும் மியன்மார் அதிகாரிகளும் வழங்கியதாக அரசு ஊடகம் குறிப்பிட்டது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

குடும்ப உறுப்பினர்களும் உள்ளூர் அதிகாரிகளும் யங்கூன் துறைமுகத்தில் நாடு திரும்புவோரைச் சந்தித்து, அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்றும் தாயகம் திரும்புவோர் மீண்டும் குடியேற மேலும் உதவிகள் வழங்கப்படும் என்றும் அரசு ஊடகம் தெரிவித்தது.