கோலாலம்பூர் விமான நிலையப் பாதுகாப்பு: மூன்று கட்டங்களாக மேம்படுத்த திட்டம்
கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
ஆகஸ்ட் மாதத்தில் முதல் கட்டம் தொடங்கியது. அதில் இலக்கு அடிப்படையிலான பரிசோதனைகள், விமான நிலையங்களில் கடுமையான நுழைவுக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட ஆறு குறுகிய கால நடவடிக்கைகள் அடங்கும்.
அண்மையில், ஜகார்த்தாவில் போதைப்பொருள் கடத்தியதாக மலேசியா ஏர்லைன்ஸ் துணை விமானி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்தப் பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன.
விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்கு நூறு விழுக்காடு பயணப் பெட்டிச் சோதனைகளும், தனிநபர்களைத் தலை முதல் கால் வரை முழுமையாக உடல் பரிசோதனை செய்வதும் அடங்கும் என்றும் அமைச்சர் சைஃபுதின் கூறினார்.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) நாடாளுமன்றத்தில் பேசியபோது இத்தகவலை அவர் தெரிவித்தார்.
கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நிகழும் இடங்கள், தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அதிக ஆபத்துள்ள விமானங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், சில நுழைவு அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, விமான நிலையத்தின் நுழைவுக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
பாதுகாப்புப் பரிசோதனைக்குப் பிறகு வழங்கப்படும் அந்த அட்டைகளை, குறுகிய காலத்திற்குப் பிறகு புதுப்பிக்க வேண்டும், இது பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.