சிங்கப்பூர் இரவு பந்தயம்: ரசிகர்களின் உற்சாகம்
சிங்கப்பூர் இரவு நேரப் பந்தயம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) ஆரவாரமாகத் தொடங்கியது.
உள்ளூரில் மட்டுமில்லாது உலகின் பல்வேறு இடங்களிலிருந்து ரசிகர்கள் சிங்கப்பூர் கார் பந்தயத்தைக் காண மரீனா பே பந்தயத் திடலில் குவிந்தனர்.
பிற்பகல் இரண்டு மணிக்கே ரசிகர்கள் பலர் பந்தயத் திடலைச் சுற்றியுள்ள இடங்களில் கூடத் தொடங்கினர். இளையர்கள், மூத்தோர், பெரியவர்கள் என எல்லா வயதுப் பிரிவினரையும் பார்க்க முடிந்தது.
“காலை 11 மணிக்கே பந்தயத் திடலுக்கு அருகே வந்துவிட்டேன். ஃபெராரி அணி வெற்றி பெற வேண்டும். ஃபெராரிக் குழுவினரைச் சந்திக்க ஆவலுடன் உள்ளேன். வீரர்கள் யாரிடமாவது கையெழுத்து வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது,” என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் கார்த்திகேயன், 23.
பந்தயத்தைக் காண இந்தியாவிலிருந்து குப்தா தம்பதியினரும் சிங்கப்பூர் வந்திருந்தனர். 65 வயதான திரு குப்தா, முதன்முறையாக எஃப்1 பந்தயத்தை நேரில் பார்க்கவுள்ளதாக உற்சாகமாகக் கூறினார். மூன்று நாள்களுக்கும் நுழைவுச்சீட்டு வாங்கியுள்ள அவர், தனக்குப் பிடித்தமான மெக்லேரன் அணி வெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தென்கொரிய, சீன நாட்டு ரசிகர்களையும் முதல் நாள் பந்தயத்தில் பார்க்க முடிந்தது. சிறப்பான வரிசைப் பிரிவுகள், போக்குவரத்து வசதி, விரைவான பாதுகாப்புச் சோதனை உள்ளிட்டவை தங்களைக் கவர்ந்ததாக அவர்கள் கூறினர்.
“புகைமூட்டம் குறைய வேண்டும், பந்தயம் இல்லாத நேரம் மழை பெய்ய வேண்டும். முதல்முறையாகச் சிங்கப்பூர் இரவு நேரப் பந்தயத்திற்கு வந்துள்ளேன், சிறப்பாக நடக்க வேண்டும்,” என்று தனது ஆசையைத் தமிழ் முரசிடம் பகிர்ந்தார் மாலதி மனோகரன், 33.