உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து விதிமீறல்கள்
சிங்கப்பூரில் செப்டம்பர் மாத பள்ளி விடுமுறையின்போது எல்லைகளைக் கடந்து மலேசியா சென்றோரில் சோதனைச் சாவடிகளில் செல்லும் வாகனவோட்டிகளுக்கான விதிமுறைகளைப் பின்பற்றாத பலரும் அடங்குவர்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வரிசையைமீறி முன்னே வாகனத்தை செலுத்தியது, சாலையில் வாகனங்களுக்கான எல்லைக்கோட்டைக் கடந்தது, ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியது போன்ற குற்றங்களைப் புரிந்த 27 ஓட்டுநர்கள்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
செப்டம்பர் 4ஆம் தேதிக்கும் 13 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் சிங்கப்பூரை விட்டு ஜோகூர் நோக்கிச் சென்றபோது விதிமுறைகளை மீறி குற்றம் புரிந்த 16 வாகனங்கள் மீண்டும் வாகனங்களுக்கான வரிசைக்குள் வரும்படி திருப்பிவிடப்பட்டன.
அதன் விவரங்களை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ஐசிஏ) வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்ட அதன் அறிக்கையில் தெரிவித்தது.
சிங்கப்பூரிலிருந்து வெளியேறிய வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட எட்டு வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு சாலைப்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கென உள்ள இரட்டை வெள்ளைக் கோடுகளை மீறியது, வாகன வரிசைகளைக் கடந்து முன்னேறிச் சென்றது ஆகிய குற்றங்களுக்காக குடியரசுக்குள் இனி நுழையாதபடி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிடிபட்ட 27 மொத்த ஓட்டுநர்களில் 16 நபர்கள் போக்குவரத்துக் காவல்துறையின் விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அதே காலகட்டத்தில் சிங்கப்பூருக்குள் நுழைந்த மூன்று வாகனவோட்டிகள் அதே வரிசை மீறியது, வெள்ளைக்கோடுகளைக் கடந்தது போன்ற குற்றங்களுக்காகப் பிடிபட்டனர் என்று ஆணையம் தெரிவித்தது.