📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 05, 2026 07:03 PM

மாணவர்களுக்கு பயந்து உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசுதான்: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு பயந்து உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசுதான்: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: மாணவர்களுக்கு பயந்து உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசுதான் என்று உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார். சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மீதான மானிய விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்கள் போராடினார்கள். சென்னை மெரினாவில், அந்த போராட்டத்தை நடத்த தவெக அரசு அனுமதி கொடுக்கவில்லை. மாணவர்களுக்கு பயந்து உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசுதான்.

உயர்கல்வி துறை சார்பாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள். அதில், ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி, இடதுசாரி அமைப்புகள் நடத்துகின்ற போராட்டங்களுக்கு மாணவர்களை அனுப்பக் கூடாது. அப்படி அனுப்பினால், கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த சுற்றறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். இந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிற இடதுசாரி தோழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுக்கொண்டார்கள்.

தலைமைச் செயலாளரும், டி.ஜி.பியும்தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியினரே வெளிப்படையாக சொல்கிறார்கள். அப்படியானால், இதெல்லாம் முதல்வருக்கு தெரிந்து நடக்கிறதா, தெரியாமல் நடக்கிறதா என்கின்ற கேள்வியை இந்த அரசுக்கு நாங்கள் வைக்க விரும்புகிறோம். நாங்கள் போதைப்பொருள் ஒழிப்பை சரியாகச் செய்யவில்லை என்றால், மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் அதிகாரிகளாக அன்று செயல்பட்ட மகேஷ்குமார் அகர்வாலை நீங்கள் ஏன் இன்றைக்கு பதவி உயர்வு செய்து தமிழ்நாட்டினுடைய டிஜிபியாக பொறுப்பை கொடுத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை வைக்கிறேன்.

எங்களுடைய ஆட்சி காலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட அமல்ராஜை இன்றைக்கு ஏன் பதவி உயர்வு செய்து, சென்னை மாநகர காவல் ஆணையராக வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியையும் இந்த அரசிடம் நான் வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

லாஜிக்கே இல்லாத குட்டிக்கதை சொல்லாமல் முதல்வர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்

சட்டப்பேரவையில் நேற்று உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறை சம்பந்தமாக இந்த கூட்டத்தொடரில் கடந்த 15 நாட்களில், நான் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறோம். ஆனால், இதுவரைக்கும் எந்த கேள்விக்கும் முதல்வர் எழுந்திருந்து பதில் சொல்லவே இல்லை. கேள்வியை கேட்டுப் பதில் வாங்கும் கடமை எங்களுடையது. வெறும் ‘ரீல்ஸ்’ கருத்தாக இல்லாமல், லாஜிக்கே இல்லாத குட்டிக் கதைகள் சொல்லாமல்,

மக்களுடைய கேள்விகளுக்கு, எங்களுடைய கேள்விகளுக்கு முதல்வர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும். வழக்கமாக தொலைக்காட்சி தொடரில் நடித்துக்கொண்டிருக்கிற ஓர் கலைஞரின் காலம் முடிந்துவிட்டால், அல்லது வேறு தொடருக்கு போய்விட்டால், தலைப்பு செய்தியாக மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக `இவருக்கு பதிலாக இவர் வருவார்’ என்று போட்டுவிடுவார்கள். அதுபோல, இந்த அரசில் எந்த கேள்வி கேட்டாலும், வேளாண் துறை அமைச்சருக்கு பதிலாக விளையாட்டு துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு பதிலாக மின்சாரத் துறை அமைச்சர் பதில் சொல்கிறார்கள்” என்று உதயநிதி கூறினார்.

116 நாட்களில் 550 குற்றங்கள்

கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதில் 200 கொலைகள், 300க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் நடந்திருக்கின்றன. ஆட்சிக்கு வந்து 6 மாதம் கூட ஆகவில்லை என்று ஆளுங்கட்சியினர் சொல்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்வது தேர்தல் வாக்குறுதிகளுக்கு பொருந்தும், அதை நான் மறுக்கவில்லை. ஆனால், சட்டம் ஒழுங்கை பொறுத்தவரைக்கும் அதை சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. ஒரு புதிய ஆட்சி வந்ததுமே குற்றவாளிகளுக்கு ஒரு வலுவான செய்தியை இந்த அரசு கொடுக்க வேண்டும். முதல்வரும் ஆட்சிக்கு வந்த புதிதில் `திறமையான அதிகாரிகளை நான் நியமித்துவிட்டேன்’ என்று சொன்னார். ஆனால், எதனால் இத்தனை குற்றங்கள் நடந்தன என்று நீங்கள் நேர்மையாக ஆராய வேண்டும் என்று உதயநிதி கூறினார்.

‘ஓடாதே என்றவர் ஓடிவிட்டார்’

நாங்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் இன்று பதில் சொல்வார் என்று நாங்கள் எல்லாம் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தோம். ‘திங்கட்கிழமை பதில் சொல்கிறேன். யாரும் ஓடாமல் இருங்கள்’ என்று சொல்லிவிட்டு அவர் ஓடிப்போய்விட்டார். அவர் சொன்ன வார்த்தையைத்தான் நான் சொன்னேன். பதில் சொல்லட்டும். அதற்காகத்தான் நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம். தவெக அரசு காவல் துறையில் மிகவும் சீர்கெட்டு போயிருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் நாங்கள் பதிய வைக்கிறோம். முடிந்தால், இதற்கு தகுந்த பதில்களை முதல்வர் திங்கட்கிழமை கொடுப்பார் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று உதயநிதி கூறினார்.

டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏன்?

டி.ஜி.பி நியமனத்தில் எதற்காக தாமதம் ஏற்பட்டது, ஏன் பொறுப்பு டி.ஜி.பி. போட்டிருந்தீர்கள் என்று அமைச்சர் ஆதவ் கேட்கிறார். எங்கள் ஆட்சியில் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, டிஜிபி நியமனத்திற்காக எங்களுடைய திமுக அரசு சார்பாக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPSC) ஒரு பட்டியலை தேர்வு செய்து அனுப்பியிருந்தோம். அப்போது மாநில அரசுக்கும், யுபிஎஸ்சிக்கும், டிஜிபி தேர்வு குழுவில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருந்தது. தமிழ்நாட்டிற்கான டிஜிபி-யை நியமிப்பதில் யுபிஎஸ்சியினுடைய பங்கு, அதாவது ஒன்றிய அரசினுடைய தலையீடு அதிகமாக இருக்கிறது என்று எங்களுடைய அரசு அன்று கருதியது.

இது மாநில உரிமைகளுக்கு எதிரானது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாநில அரசுக்கு ஏற்ற அதிகாரியை டிஜிபியாக பணியமர்த்தினால்தான் அரசோடு சேர்ந்து ஒன்றிணைந்து செயல்பட முடியும், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியும் என்று எங்களுடைய முதல்வர் அன்று அந்த முடிவை எடுத்தார். திமுக அரசு அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கும் சென்று வழக்கு போட்டது.இதற்கிடையே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக் கூடாது என்பதால், பொறுப்பு டி.ஜி.பி.ஐ அன்று எங்களுடைய முதல்வர் நியமனம் செய்தார். அவர் உடல்நிலை சரியில்லை என்று விடுப்பில் சென்றதால், மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அபய்குமார் சிங் டி.ஜி.பியாக நியமித்தோம். இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. சட்டத்திற்கு உட்பட்டுத்தான் எங்கள் தலைவர், இதை செய்திருக்கிறார். இதில் எந்த சட்ட விரோதமும் கிடையாது என்று உதயநிதி கூறினார்.