தேர்தல் ஆணையத்தை கண்டித்து டெல்லி, மும்பையில் போராட்டம்
புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு (எஸ்ஐஆர்) எதிர்ப்பு தெரிவித்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) போராட்டம் நடைபெற்றது.
தடையை மீறி நடத்தப்பட்ட அப்போராட்டத்தில் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான ஆதிஷி, சௌரப் பரத்வாஜ், எல்எல்ஏ சஞ்சீவ் ஜா, அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் காரணமின்றி நீக்கப்பட்டுள்ளதாக அவர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். திரு ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) காலை முதல் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டக்காரர்கள் குவியத் தொடங்கினர்.
அதையடுத்து, டெல்லி மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. 11 முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதுடன், ஜந்தர் மந்தர் பகுதியில் கைப்பேசி இணையச்சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில், மும்பையில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) சார்பில் சிவாஜி பூங்கா பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானதை அடுத்து, அங்கும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) சிறை நிரப்புப் போராட்டம் நடைபெறும் என சிஜேபி அறிவித்ததையடுத்து, அக்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளிவந்தது. காவல்துறை அதை மறுத்தது.
டெல்லியில் காவல்துறையின் தடுப்புகளையும் மீறி ஆயிரக்கணக்கான இளையர்களும் எதிர்க்கட்சித் தொண்டர்களும் திரண்டதால் பெரும் பதற்றம் நிலவியது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
கைது செய்யப்பட்ட பிறகு சமூக ஊடகத்தில் பதிவிட்ட டெல்லி முன்னாள் முதல்வருமான ஆதிஷி, ஜனநாயகத்தையும் மக்களின் வாக்கு உரிமையையும் காப்பாற்ற நாங்கள் காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம் என்று குறிப்பிட்டார்.