இடைத்தேர்தலில் வாக்களிக்க பணப்பட்டுவாடா: தவெக மீது இடதுசாரிகள் குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகம் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யக் கோரி, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், பாஜகவுக்குச் சாதகமாகச் செயல்பட்டு தேர்தல் அமைப்பின் மீதுள்ள நம்பிக்கையைச் சிதைத்துள்ளதாகச் சாடினார்.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தவெக சார்பில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகப் பொதுமக்கள் கூறியதாகக் குறிப்பிட்ட அவர், ‘தூய அரசியல்’ குறித்துப் பேசுபவர்கள் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றார்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேசுகையில், மதுராந்தகம், தாராபுரத்தில் திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் முகாமிட்டு வீடுதோறும் உள்ள வாக்காளர்களைக் கணக்கெடுத்து வாக்களிக்கப் பேரம் பேசியதாகத் தெரிவித்தார்.
வாக்குக்கு விலை பேசுவது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் இந்த முறைகேட்டில் ஈடுபடுபவர்களை வரலாறு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.