Sigma Public Review
சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் சிக்மா திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸான படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. விஜய் ரசிகர்கள் அதிகம் காணப்பட்டார்கள். இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் சிக்மா. இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க தமன் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இன்று அந்தப் படமானது தியேட்டர்களில் ரிலீஸானது. சஞ்சய்யின் தாய் சங்கீதாவும், தங்கை சாஷாவும் சென்னையில் இருக்கும் கமலா திரையரங்கத்தில் முதல் காட்சியை பார்த்தார்கள். ஏராளமான விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களுக்கு படை எடுத்தார்கள்.
சிக்மா பப்ளிக் விமர்சனம்: இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை ஷேர் செய்திருக்கிறார்கள். படம் பார்த்த ரசிகர் ஒருவர், "படம் நன்றாக இருந்தது. ரொம்ப எதிர்பார்த்து வர வேண்டாம். இது முதல் என்பதால் வரும் படங்களில் மாற்றிக்கொள்ள வேண்டும். கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதை சுமார்தான். அறிமுக இயக்குநராக டீசன்ட் படம்தான். தியேட்டரில் வந்து பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
வை ராஜா வை 2 மாதிரி: இன்னொரு இளைஞர் பேசுகையில், "வை ராஜா வை படத்தின் இரண்டாவது பாகம் மாதிரி இருந்தது. போர் அடிக்கவில்லை. ட்ரோன் ஷாட்டுகள், கேமரா ஆங்கிள் எல்லாம் சூப்பர். படம் பார்க்க சங்கீதா அண்ணி வந்திருக்கார். தளபதி குடும்பத்தின் தரிசனம் கிடைத்துவிட்டது. படம் தாறுமாறு. நிச்சயமாக குடும்பத்தோடு வந்து படத்தை பார்க்கலாம்" என்றார்.
படம் சுமார்தான்: இன்னொருவரோ, "படம் சுமார்தான். எதிர்பார்த்து வந்தது மாதிரிதான் இருந்தது. ஜேசனுக்கு இது நல்ல அறிமுகம்தான். கதை, திரைக்கதை எல்லாம் வழக்கமான கமர்ஷியல் படமாகத்தான் இருந்தது. ஆஹாவென்று சொல்லும்படியும் இல்லை; சொதப்பிவிட்டார் என்றும் சொல்ல முடியாது. ஓகே டீசன்ட்டாக போனது. விஷூவலாக சூப்பர். எழுத்து மட்டும் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்க வேண்டும்" என்றார்.
முன்கூட்டியே தெரிந்துவிடுகிறது: மற்றொரு ரசிகர், "ஒருதடவை படத்தை பார்க்கலாம். வழக்கமான கதை, திரைக்கதைதான். புதிதாகவெல்லாம் எதுவும் இல்லை. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்துவிடுகிறது. படத்தை விஷூவலும், இசையும்தான் காப்பாற்றுகிறது. இயக்குநராக அவரிடம் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் இது முதல் படம்தானே. வரும் காலங்களில் அதையெல்லாம் சரி செய்துகொள்வார் என்று நம்புகிறேன். அப்பா சி.எம்மாக இருந்தாலும் அவர் சப்போர்ட் இல்லாமல் படம் எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறார். அதை பாராட்ட வேண்டும்" என்றார்.
இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்: அதேபோல் இன்னொருவர், "படம் சுமார்தான். எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. முயற்சி செய்திருக்கிறார்தான். இன்னும் கற்றுக்கொள்ளலாம். ஸ்க்ரீன் ப்ளே,ரைட்டிங் எல்லாம் மேம்பட வேண்டும். ஒரு தடவை பார்க்கலாம். இந்தப் படத்தில் அவர் நடித்திருந்தால் கண்டிப்பாக 200 கோடி ரூபாய் அல்லது 100 கோடி ரூபாயை அள்ளியிருக்கும்" என்றார்.