📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 14, 2026 10:34 AM

"த.வெ.க-வினர் என்னிடம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்"

"த.வெ.க-வினர் என்னிடம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்"

"த.வெ.க-வினர் என்னிடம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்" - சட்டமன்றம் குறித்து தமிழிசை சாடல் !

தவெக அரசு, பாஜக உறவு, விஜய்யின் பிரதமர் கனவு குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் பகிர்ந்த பரபரப்பு கருத்துகள்!...

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, 'பா.ஜ.க.வினர் தவறு செய்தால் த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்காமல் தடவிக் கொடுக்கிறது' என சட்டமன்றத்தில் விமர்சனம் செய்திருந்தார். உண்மையில், பா.ஜ.க.வைக் கண்டு த.வெ.க. அஞ்சுகிறதா, தமிழக அரசியல் களம் எப்படி இருக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் பா.ஜ.க.வின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜனை சந்தித்துப் பேசினோம்.

த.வெ.க. ஆட்சியில் சட்டமன்ற விவாதங்கள் ஆரோக்கியமாக நடந்தனவா?

"இப்போதுதான் பெரும்பாலான மக்கள் சட்டமன்றத்தை பார்க்க தொடங்கியுள்ளனர். நான் கல்லூரி படித்த காலத்தில் ரேடியோவில் சட்டமன்ற நிகழ்வுகளை ஒலிபரப்புவார்கள். தற்போது அதை நேரலையில் ஒளிப்பரப்புவது வரவேற்கத்தக்கது. சட்டமன்றத்தில் எல்லா விமர்சனங்களுக்கும் பதில் கூற வேண்டும் என்கிற அவசியமில்லை. சில நேரம் சட்டமன்றமா அல்லது சண்டை மன்றமா என புரியாத அளவுக்கு சத்தமாக இருக்கிறது."

ஆளுநர் பதவியைவிட்டு மீண்டும் தமிழக அரசியலில் களமிறங்கிய காரணம் என்ன?

"பா.ஜ.க. இன்னும் வளர வேண்டும் என்பதற்காகவும், தமிழக மக்கள் மனதில் இன்னும் பா.ஜ.க.வுக்கு இடம் இருக்கிறது என்பதை நிரூபிக்கவும் களமிறங்கி உள்ளேன்."

நீங்கள் போட்டியிட்ட அத்தனை தேர்தலிலும் உங்களுக்கு தோல்விதான் கிடைக்கிறது என்கிற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

"நான் போட்டியிட்ட எல்லா தேர்தலிலும் என் கட்சி சார்பில் போட்டியிட்ட எல்லோருமே தோல்விதான் அடைந்தார்கள். நான் ஏறக்குறைய 28 வருடங்களாக இந்தக் கட்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். எனவே, இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ள விரும்புகிறேன்."

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, 'தி.மு.க. மீது உடனே நடவடிக்கை எடுக்கும் த.வெ.க. அரசு, பா.ஜ.க மீது நடவடிக்கை எடுக்காமல் தடவிக் கொடுக்கிறது என்கிறாரே?

"தி.மு.க. எப்போதுமே பா.ஜ.க. செய்யும் எல்லாவற்றையும் குறையாகவே பார்க்கும். எங்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நாங்கள் எதுவும் செய்யவில்லை. 'மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்' என விஜய் பேசியிருந்தார். அதை நான் வரவேற்கிறேன். பாஜகவோடு இணக்கமாக இருக்க வேண்டும் என அவரை சொல்லவில்லை. இணக்கமாக இருந்தால் நல்லது என்றுதான் சொல்கிறேன்."

அடுத்த பிரதமர் ராகுல் காந்தியா, விஜய்யா என்பது கூட்டணிக்குள் சர்ச்சையாக வெடித்திருக்கிறதே?

"ராகுல் பலமுறை தோற்றவர். அதேபோல் 100 நாட்களே ஆன தவழ்கின்ற குழந்தையான விஜய்யை எப்படி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என கூற முடியும்? கூட்டணியில் இருந்தாலும் தவெ.க. அரசு ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது புலப்படுகிறது. அவர்கள் ராகுலை தவிர்ப்பதற்கு தான் விஜய்யை பிரதமர் என சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்."

கடந்த முறை நான்கு இடங்களில் வென்ற பா.ஜ.க., தற்போது ஓரிடத்தில் மட்டுமே வென்றிருக்கிறது. பா.ஜ.க. செல்வாக்கு அவ்வளவுதானா?

"அப்படி பார்த்தால், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தோல்வி அடைந்திருக்கிறார். திமுக அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது என எடுத்துக்கொள்ளலாமா? தற்போது நடந்திருப்பது யாரும் எதிர்பாராத சூழல், அவ்வளவுதான்."

விஜய் ஆட்சிக்கு வர ரீல்ஸ்தான் காரணம் என்கிறார்களே?

"ரீல்ஸ் மட்டுமல்ல. சினிமாவும் பெரிய காரணம் நடிகர் விஜய்யை திரையிலேயே பார்த்து ரசித்தவர்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர். பெரிய திரையில் அவரை பார்த்தவர்கள் சின்னத்திரையான அலைபேசியிலும் பார்த்து வாக்களித்துள்ளனர்."

சட்டமன்றத்தில் த.வெ.க. உறுப்பினர்களின் பேச்சு எப்படி?

"முதலில் தமிழை அவர்கள் நன்றாக பேச வேண்டும். வழக்காடு மன்றத்தில் தமிழ் இருக்க வேண்டும் என்கிறவர்கள் சட்டமன்றத்தில் தமிழ் பேச வேண்டாமா? மரியவில்சன் பைபிளை மேற்கோள் காட்டுகிறார். பாண்டிச்சேரியிலிருந்து வந்த புஸ்ஸி ஆனந்தே நன்றாக தமிழ் பேசும்போது, அமைச்சர் மரியவில்சனுக்கு என்ன பிரச்னை? தமிழை தவறாக உச்சரிப்பது ஃபேஷன் என அப்படி பேசுவதன் மூலம் ரீல்ஸில் பிரபலமாக நினைக்கிறார். இது தவறான அணுகுமுறை நான் வேண்டுமானால் தமிழ் சொல்லித்தர தயாராக இருக்கிறேன். த.வெ.க உறுப்பினர்கள் என்னிடம் வந்து தமிழ் கற்றுக்கொள்ளட்டும்."

அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

"சட்டசபையில் இல்லாத தொழிற்சாலையைப் பற்றி பேசுகிறார்கள். 'ஊழல் இல்லாமல் ஆட்சி செய்கிறோம்' என்கிறார்கள் அது வரவேற்கத் தக்கது. ஆனால். 'பட்டாசு ஆலை அமைக்க பணம் கேட்கிறார்கள்' என்று அவர்கள் மீதும் குற்றச்சாட்டு வருகிறது. இதனால், ஊழல் இல்லாமல்தான் ஆட்சி செய்கிறார்களா எனும் சந்தேகமும் எழுகிறது? அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது கோபம் வருகிறது. ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு என சொல்வது நியாயமா? சாமானிய மக்களுக்கு இலவசமாக அல்லவா கொடுக்க வேண்டும். அதேபோல் செல்போன் எடுத்துச் சொல்லக்கூடாது என்பதெல்லாம் தேவையற்றது. அர்ச்சனை சீட்டு போன்ற விபரங்கள் செல்போனில் இருக்கும்போது செல்போன் இல்லாமல் எப்படி செல்ல முடியும்?"

சட்டமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் பேச்சு எப்படி இருக்கிறது?

"மிகவும் சிறப்பு. குறிப்பாக சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த், சி.பி.எம். எம்.எல்.ஏ.லதா, தவெக எம்.எல்.ஏ சிந்து சிறப்பாக பேசுகிறார்கள்."

த.வெ.க.வுக்கு ஆதரவு தந்தவர்கள் தற்போது த.வெ.க. அரசின் மீதே அதிருப்தி தெரிவிக்கிறார்களே?

"அதிருப்தி இருந்தால் வெளியில் வர வேண்டியதுதானே. கம்யூனிஸ்ட்களைப் பொறுத்தவரை அவர்கள் வெளியில் இருந்து ஆதரவு என சொல்லிவிட்டனர். ஆனால், காங்கிரஸ் பின்வாசல் வழியே உள்ளே வராவிட்டால் அமைச்சர் பதவி கிடைத்திருக்காது. அதனால், இந்தப் பதவி ஆசை யாரையும் கூட்டணியிலிருந்து வெளியே வரவிடாது என கருதுகிறேன்."

அண்ணாமலை பா.ஜ.க.வை விட்டு சென்றது கட்சிக்கு பலவீனமா?

"கட்சிக்கு தற்போது சம்பந்தம் இல்லாதவர்கள் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை."