📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 14, 2026 11:41 AM

சவூதி அரேபியா 50+ தாக்குதல்கள்: ஹூதி அமைப்பு கண்டனம்

சவூதி அரேபியா 50+ தாக்குதல்கள்: ஹூதி அமைப்பு கண்டனம்

சனா: ஏமனின் ஹூதி அமைப்பினர், தங்களின் நிலைகளைக் குறிவைத்துச் சவூதி அரேபியா 50க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) தெரிவித்துள்ளனர்.

சவூதி அரேபியாவில் உள்ள ராணுவ முகாம் மீது ஆளில்லா வானூர்தி, ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பு கூறியதைத் தொடர்ந்து அந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இவ்வாண்டு ஜூலை மாதத்தில் ஏமனில் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்தது. அதன் பிறகு சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசாங்கப் படைகளுடன் ஹூதி அமைப்பினர் மீண்டும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த அமைப்பு சவூதி அரேபியாவிற்கு எதிராகக் கடற்புற முற்றுகையை அறிவித்துச் செங்கடலில் உள்ள அதன் கப்பல்களைக் குறிவைக்கத் தொடங்கியது.

ஹூதி அமைப்பினர் பாப் அல்-மண்டாப் நீரிணை மீதான தங்கள் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தி, ஏமனின் செங்கடலின் கடலோரப் பகுதியைக் கைப்பற்ற ஒரு வாரம் தீவிரத் தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அண்மை மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் தொடரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் இந்த நீர்வழிப் பாதை சவூதியின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

டெலிகிராம் சமூக ஊடகத்தில் பதிவிட்ட அந்த அமைப்பின் ராணுவப் பேச்சாளர் யாய்ஹா சாரீ, கடந்த 24 மணி நேரத்தில் 58 வான்வழித் தாக்குதல்களைச் சவூதி தரப்பினர் நடத்தியதாகக் கூறினார்.

ஹூதி அமைப்பினர் சவூதி அரேபியாவிற்கு எதிராக அண்மை ஆண்டுகளில் ஆகக் கடுமையான ஏவுகணை, ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களை இந்த வாரம் நடத்தினர். அந்தத் தாக்குதல்களில் எண்ணெய்த் தளங்கள் தீப்பிடித்து எரிந்தன; அவற்றில் 73 பேர் காயமடைந்தனர்.