Sigma Review: ’சிக்மா’ விமர்சனம்.. ஜேசன் சஞ்சய்யின் முதல் படம் எப்படி இருக்கு?.. ஓகேவா? வொர்ஸ்ட்டா?
சென்னை: லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜு சுந்தரம், ஷிவ் பண்டிட், அன்புதாசன், ஷீலா ராஜ்குமார் ஒரு குத்தாட்ட பாடலுக்கு கேத்தரின் தெரசா என பலர் நடித்துள்ள சிக்மா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
அட்டகாசமான ஹெய்ஸ்ட் கதையை கையில் எடுத்துக் கொண்டு ஜேசன் சஞ்சய் இயக்குநராக களமிறங்கியுள்ளார். ஆனால், திரைக்கதை தான் பலமாக இல்லாமல் படத்தின் சுவாரஸ்யத்தை ஆங்காங்கே ஸ்பாயில் செய்கிறது.
இயக்குநராக ஜேசன் சஞ்சய் பாஸ் மார்க் வாங்கியுள்ளார். ஆனால், இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டு கதையை சுவாரஸ்யப்படுத்தியிருந்தால் மணி ஹெய்ஸ்ட், மங்காத்தா அளவுக்கு ஒரு தரமான படமாக வந்திருக்கும். சிக்மா படத்தின் கதை, பிளஸ், மைனஸ், சஞ்சய் எங்கே சாதித்தார், எங்கே கோட்டை விட்டார் என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
சிக்மா கதை: சீசர் எனும் போதைப் பொருள் நெட்வொர்க்கை நடத்தி வரும் எழில் அதை ரெட்டியின் (சம்பத் ராஜ்) பணத்தை வைத்து செய்து வருகிறார். லீலை படத்தின் ஹீரோவான ஷிவ் பண்டிட் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். தியேட்டருக்கு அண்டர் கிரவுண்டில் இல்லீகலாக கேம்ப்ளிங் செய்து வரும் ஷிவ் பண்டிட்டின் நண்பரான எழில் நண்பனுடன் இணைந்து போதைப் பொருள் பிசினஸ் செய்துக் கொண்டே நண்பனை ஏமாற்ற, எழிலை ஷிவ் பண்டித் தனது ஆளை வைத்து போட்டுத் தள்ளுகிறான்.
அந்த எழிலிடம் ரெட்டி தனது 1000 கோடி ரூபாய் பணம் இருக்கும் வால்ட்டின் சாவியை கொடுக்க, அந்த சாவி எதேச்சையாக ஹீரோ குரு (சந்தீப் கிஷன்) கையில் கிடைக்க, அந்த பணத்தை ஹீரோ அடைந்தாரா? அல்லது ரெட்டி அடைந்தாரா? அல்லது ஷிவ் பண்டிட் எடுத்துக் கொண்டானா? என்பது தான் இந்த சிக்மா படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: ஜேசன் சஞ்சய் இயக்குநராக ஒரு ஆக்ஷன் படத்தை என்டர்டெயின்மென்ட் கலந்துக் கொடுக்க நினைத்துள்ளார். அதற்காக அவர் தேர்வு செய்த அன்புதாசன், ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் காமெடி காட்சிகளில் பெரிதாக கை கொடுக்காமல் போனது தான் படத்தின் பெரிய பலவீனமாக தெரிகிறது.
சந்தீப் கிஷன் தனது அம்மாவின் நினைவாக கடனில் உள்ள லைப்ரரியை மீட்க போராடி வருகிறார். குரல் ஒலி என ஆப் வைத்து ஆடியோ புத்தகங்களை உருவாக்கும் வேலையை செய்து வருகிறார். ஆர்ஜே சாம் கதாபாத்திரத்தில் ஹீரோயின் ஃபரியா அப்துல்லா அழகாக என்ட்ரி கொடுத்து தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.
லீலை பட ஹீரோ வில்லத்தனத்தில் பெரிதாக மிரட்ட ஸ்கோப் இருந்தும் படத்தின் ரியல் வில்லன் யார் என்கிற குழப்பத்தில் அவருக்கான ஆட்டத்தை சரியாக ஆட முடியாமல் பல இடங்களில் தடுமாறினாலும், அவரது அப்ரோச், முதல் பாதியில் வரும் அந்த கார் பார்க்கிங் சண்டைக் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது.
பிளஸ்: ஜேசன் சஞ்சய் முதல் படம் என்றே தெரியாத அளவுக்கு படத்தை எடுத்துள்ளது சிறப்பாகவே உள்ளது. எண்டர் தி டிராகன் படத்துக்கு டிக்கெட் கேட்டால், அண்டர்கிரவுண்ட் கேம்ப்ளிங் உலகத்துக்கு அழைத்துச் செல்வது, புரூஸ் லீ மாஸ்க் அணிந்துக் கொண்டு ஹீரோ சண்டைப் போடுவது என ஏகப்பட்ட ஐடியாக்கள் ரொம்பவே புதிதாக உள்ளது. தமன் இசையில் பாடல்களும், பின்னனி இசையும் பக்கா. அதுவும் 2ம் பாதியில் வரும் கேத்தரின் தெரசா ஆடும் அந்த சுலோச்சனா பாடல் ஆட்டம் போட வைக்கிறது.
மைனஸ்: தமிழ், தெலுங்கு படங்களில் பார்த்து பழக்கப்பட்ட ஏகப்பட்ட மசாலா படங்களின் வாடையே இந்த சிக்மா படத்திலும் அடிக்கிறது. ஹெய்ஸ்ட் படத்தை எடுக்க நினைத்ததும் அதை எடுத்த விதமும் ஓகே தான் என்றாலும், லாஜிக் மீறல்கள், ஜம்ப் ஆகும் சீன்கள் என படம் பல இடங்களில் பின்னடைவை சந்திக்கிறது. 1000 கோடிக்கு சொந்தக்காரரான வில்லன் அவனே ரோட்டில் இறங்கி சண்டை போடுவதும், அவன் சேஃப் ஹவுஸுக்கே சென்று பணத்தை அடிக்க போடும் திட்டமெல்லாம் பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனாலும், கடைசி வரை போரடிக்காமல் சொல்ல வந்த கதையை கச்சிதமாக சொல்லி ஒரு இயக்குநராக பாஸ் ஆகியுள்ளார் ஜேசன் சஞ்சய். ஆனால், டிஸ்டிங்ஷன் எல்லாம் வாங்க பெரிய முயற்சி தேவை.