📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 18, 2026 09:33 PM

ஶ்ரீவில்லி.யில் 2

ஶ்ரீவில்லி.யில் 2

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூரில் கூலி உயர்வு, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள், சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது, போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர் நகரில் 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் மூலம் 1000-க்கும் மேற்பட்ட பெடல் தறிகளில் பிரதானமாக பொங்கல் தொகுப்பில் அரசு வழங்கும் சேலை நெசவு செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பார்டர் உடன் கூடிய புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும், 4 மாத கால வேலை இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும், இருப்பில் உள்ள பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நெசவாளர்கள் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் நாளான நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி தெரு, நந்தவனத் தெரு, கீழப்பட்டி, முதலியார்பட்டி தெருவில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் முன் கஞ்சித் தொட்டி திறந்து நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டாவது நாளான இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள் கருப்பு கொடி ஏந்தியபடி, ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

நெசவாளர்களை முதலியார்பட்டி தெருவில் தடுத்து நிறுத்திய போலீஸார், கைத்தறித் துறை அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, நெசவாளர்கள் கலைந்து சென்றனர்.