“அடுத்த 100 ஆண்டுக்கு தவெக தான் ஆட்சி!”
“அடுத்த 100 ஆண்டுக்கு தவெக தான் ஆட்சி!” – காஞ்சியில் மதுரை ஆதீனம் அடித்த அட்ராசிட்டி கணிப்பு!
"வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மட்டுமல்லாது, இனி வரும் நூறாண்டுகளுக்குத் தமிழகத்தில் தவெகவின் ஆட்சியே அமையும்."
சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மிக அற்புதமாகச் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இதில் தான் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை மதுரை ஆதீனம் தெளிவுபடுத்தியுள்ளார். கும்பாபிஷேகத்திற்குத் தான் சென்றால், தன்னைத் தொடர்ந்து வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்றும், அதனால் அங்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் தேவையற்ற சிரமமும் இடையூறும் ஏற்படும் என்பதாலேயே இந்த விழாவில் பங்கேற்பதைத் தவிர்த்ததாகக் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய மதுரை ஆதீனம், தமிழக வெற்றி கழகம் (தவெக) மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்துத் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். "ஆண்டவன் பெயரில் விஜய் பதவி ஏற்று இருப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. லஞ்சம் கொடுக்கக் கூடாது என்றும், யாராவது லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் முதலமைச்சர் விஜய்யின் பெயரைச் சொல்லுங்கள் என்றும் அவர் கூறிய கருத்து என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது" எனக் குறிப்பிட்டார். மேலும், இதுவரை தமிழகம் கண்டுள்ள முதலமைச்சர்களை விட விஜய் போன்ற ஒரு அற்புதமான தலைவரைத் தான் பார்த்ததில்லை என்றும், என்னுடைய முழுமையான ஆசி என்றும் தவெகவிற்கே இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து விஜய் குறித்தான அடுத்தகட்ட நிகழ்வுகளைப் பற்றிப் பேசிய ஆதீனம், வரும் அக்டோபர் 11 ஆம் தேதி தமிழ்ச்சங்கம் சார்பில் நடத்தப்படும் விழாவில், முதலமைச்சர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடத் தனக்கு அழைப்பு வந்துள்ளதாகத் தெரிவித்தார். வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மட்டுமல்லாது, இனி வரும் நூறாண்டுகளுக்குத் தமிழகத்தில் தவெகவின் ஆட்சியே அமையும் என்றும், தொடர்ச்சியாகத் தமிழக வெற்றி கழகமே வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைக்கும் என்றும் மதுரை ஆதீனம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி