📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 10, 2026 08:04 AM

புகைமூட்டத்தில் சிங்கப்பூர்: ஆரோக்கியமற்ற நிலையில் காற்றுத்தரம்

புகைமூட்டத்தில் சிங்கப்பூர்: ஆரோக்கியமற்ற நிலையில் காற்றுத்தரம்

சிங்கப்பூர் முழுவதும் இன்று காலை புகைமூட்டமாகக் காணப்பட்டது.

சனிக்கிழமை அதிகாலை (அக்டோபர் 10) நிலவரப்படி, சிங்கப்பூரின் காற்றுத் தரம் சற்று மேம்பட்டிருந்தாலும் 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு (பிஎஸ்ஐ) தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையிலேயே இருந்தது.

காலை 7 மணி நிலவரப்படி பிஎஸ்ஐ குறியீடு, வடக்கு: 125, தெற்கு: 141, கிழக்கு: 157, மேற்கு: 162, மத்திய பகுதி: 176 எனப் பதிவாகியுள்ளது.

24 மணி நேரச் சராசரி பிஎஸ்ஐ குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் காற்றுத் தரம் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது.

தற்போதைய காற்றின் தரத்தைக் குறிப்பதோடு உடனடி நடவடிக்கைகளைத் தீர்மானிக்க பயன்படும் பிஎம்2.5 அளவு, வடக்கு (69), தெற்கு (89), கிழக்கு (112), மேற்கு (104), மத்திய (124) ஆகிய ஐந்து பகுதிகளிலும் அதிகமாகவே இருந்தன.

24 மணிநேர அடிப்படையில் 56 முதல் 150 வரை இருக்கும் பிஎம்2.5 அளவு, காற்றில் உள்ள நுண்ணிய துகள்களின் அளவு அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.

அக்டோபர் 9ஆம் தேதி மத்தியப் பகுதியில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நேரத்தில் பிஎஸ்ஐ அளவு 192ஐ எட்டியது. இதுவே, இவ்வாண்டில் பதிவான மிக உயர்ந்த அளவாகும்.

தேசிய சுற்றுப்புற வாரியம், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 10க்கான பிஎஸ்ஐ அளவு ‘ஆரோக்கியமற்ற நிலை முதல் குறைந்தபட்ச மிக மோசமான ஆரோக்கியமற்ற நிலை’ வரை இருக்கும் என்று கணித்திருந்தது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

24 மணி நேர பிஎஸ்ஐ அளவு, ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும்போது, வெளியில் நீண்ட நேரம் இருப்பதையும் அல்லது கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வாரியம் அறிவுறுத்தியிருந்தது.

முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நாள்பட்ட நுரையீரல் அல்லது இதய நோய் உள்ளவர்கள், அத்தகைய செயல்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.