📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 09, 2026 08:03 PM

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சைக்கிளில் வந்த எஃப்1 ஓட்டுநர் வால்டெரி போட்டாஸ்

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சைக்கிளில் வந்த எஃப்1 ஓட்டுநர் வால்டெரி போட்டாஸ்

மலேசியாவின் செபாங்கிலிருந்து சிங்கப்பூருக்கு 419 கிலோமீட்டர் தொலைவிற்குச் சைக்கிளில் பயணம் செய்து வந்துள்ளார் எஃப்1 கார்ப் பந்தய ஓட்டுநரான வால்டெரி போட்டாஸ். கேடிலாக் அணியைப் பிரதிநிதிக்கும் அவர், புதன்கிழமை (அக்டோபர் 7) சிங்கப்பூர் வந்தடைந்தார்.

அதையடுத்து சமூக ஊடகங்களில் தமது சைக்கிள் பயணம் குறித்துப் பதிவிட்டு வருகிறார். பயணம் மேற்கொண்ட வழியில் தான் பார்த்தவற்றையும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அவர் அந்தப் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.

பின்லாந்து நாட்டவரான அவர், வார இறுதியில் நடைபெறும் சிங்கப்பூர் இரவுநேர கார்ப் பந்தயத்தில் பங்கேற்கவிருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பஹ்ரேனில் நடந்த பந்தயத்தில் கார் சுழன்று விபத்துக்குள்ளான சில மணிநேரங்களிலேயே விமானப் பயணத்திற்குப் பதிலாகச் சைக்கிளை அவர் தேர்ந்தெடுத்தார்.

கரடுமுரடான பாதைகள், காடுகளின் வழியே இரவில் பயணம் செய்தபோது நாய் ஒன்று துரத்தியதாகவும், பாதையைக் கடந்து சென்ற நல்லபாம்பு, மலைப்பாம்பு ஆகியவற்றைக் கண்டதாகவும் அவர் கூறினார். மேலும், பாதையில் இருந்த பெரிய பல்லி ஒன்றைத் தாண்டிச் சென்றதாகவும், குரங்குகளைப் பார்த்ததாகவும், சிறிய பாதையில் பசுக்களின் கூட்டத்திற்குப் பின்னால் சிக்கிக்கொள்ள நேரிட்டதாகவும் அவர் விவரித்தார்.

மலேசிய உணவு வகைகளைச் சுவைத்ததாகவும் போட்டாஸ் குறிப்பிட்டுள்ளார்.

419.67 கிலோமீட்டர் பயணத்தின் நிறைவாகச் சிங்கப்பூர் வந்தடைந்ததும் ரிட்ஸ்-கார்ல்டன், மில்லெனியா சிங்கப்பூரின் சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த சைக்கிளோட்டியான போட்டாஸ், செக் குடியரசில் நடைபெற்ற தகுதிப் போட்டியில் ஐந்தாமிடம் பிடித்து கிராவல் உலக வெற்றியாளர் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இருப்பினும், அந்தப் போட்டியும் இந்த வார இறுதியில்தான் நடைபெறுவதால், அவர் சைக்கிளோட்டத்துக்குப் பதிலாக எஃப்1 கார்ப் பந்தயத்தில் பங்கேற்கவுள்ளார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

2023ஆம் ஆண்டில் எமிலியா ரொமானா கார்ப் பந்தயம் ரத்து செய்யப்பட்டபோது போட்டாஸ் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற சைக்கிளோட்டப் போட்டியில் பங்கேற்றது நினைவுகூரத்தக்கது.

புதிய கேடிலாக் அணியுடன் ஃபார்முலா ஒன் போட்டிக்குத் திரும்பியுள்ள போட்டாஸுக்கு இந்த ஆண்டு கடினமான ஒன்றாக அமைந்தது. நடப்புப் பருவத்தில் 16 பந்தயங்களுக்குப் பிறகும் புள்ளிகள் எதுவுமின்றி ஓட்டுநர்கள் தரவரிசையில் அவர் 22வது இடத்தில் உள்ளார். அத்துடன், எட்டுப் போட்டிகளை அவரால் நிறைவுசெய்ய முடியாமல் போனது.

அடர்ந்த காட்டில் இரவில் சைக்கிள் ஓட்டியதே மனத்திற்குப் பெருஞ்சவாலாகவும் மிகவும் திகிலூட்டும் அனுபவமாகவும் இருந்தது என்றார் போட்டாஸ்.