சிங்கப்பூர் வரலாற்றுக்கூடம்: 700 ஆண்டுகால வரலாறு
கிட்டத்தட்ட 30 கிலோ எடையுள்ள கைவண்டியை இழுத்துப் பார்ப்பது, 1970களின் மின்தூக்கியில் பயணம் செய்வது, எதிர்காலச் சிங்கப்பூரைத் தங்கள் குரல்வழிப் பதிவுகளால் வடிவமைப்பது எனப் புதுப்பிக்கப்பட்ட சிங்கப்பூர் வரலாற்றுக்கூடத்தில் (Singapore History Gallery) பார்வையாளர்கள் பல்வேறு சுவாரசியமான அனுபவங்களைப் பெறலாம்.
மூன்றாண்டுகாலப் புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, இக்கூடம் சனிக்கிழமை (அக்டோபர் 10) தேசிய அரும்பொருளகத்தில் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது.
இதன் அதிகாரபூர்வத் திறப்புவிழா வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) மாலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம் நினைவுப் பலகையைத் திறந்துவைத்ததுடன் வரலாற்றுக்கூடத்தையும் சுற்றிப்பார்த்தார்.
சிங்கப்பூரின் 700 ஆண்டுகால வரலாறு, ஏழு காலக்கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இங்கு மறுவடிவம் பெற்றுள்ளது.
‘ஷா ஃபவுண்டேஷன் கண்ணாடி வட்ட மண்டபத்தில்’ (Shaw Foundation Glass Rotunda) திரையிடப்படும் ‘சிங்கப்பூர் ஒடிசி’ (Singapore Odyssea) எனும் பல்லூடகக் காட்சியுடன் வரலாற்றுப் பயணம் தொடங்குகிறது. நாட்டின் தேசிய கீதத்தை இயற்றிய ஸுபிர் சையத்தின் பியானோ உள்ளிட்ட அரிய வரலாற்றுப் பொருள்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.
பார்வையாளர்கள் தங்கள் எண்ணங்களைக் குரல் பதிவாகப் பகிர்ந்துகொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அக்குரல் பதிவுகள், கண்காட்சியின் நிறைவில் எதிர்காலச் சிங்கப்பூரின் கூட்டு மின்னிலக்கத் தோற்றத்தை உருவாக்கப் பயன்படும்.
இந்திய, தமிழ்ச் சமூகங்களின் வரலாற்றுச் செழுமை
சிங்கப்பூரின் வரலாற்றில் இந்திய, தமிழ்ச் சமூகங்களின் பங்களிப்புகளையும் அடையாளங்களையும் எடுத்துக்காட்டும் பல அரிய வரலாற்றுச் சின்னங்கள் இக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
10ஆம் நூற்றாண்டுக்கும் 14ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ‘சிங்கப்பூர்க் கல்’லில் (Singapore Stone) பொறிக்கப்பட்டுள்ள ‘கவி’ (Kawi) எழுத்துகள், தெற்காசியாவின் சமஸ்கிருத மொழியுடன் தொடர்புடையவையாகக் கருதப்படுகின்றன. அவை பண்டைய சிங்கப்பூருக்கும் வட்டாரப் பகுதிகளுக்கும் இடையே நிலவிய தொடர்புகளை எடுத்துக்காட்டுகின்றன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
1881ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் படிவத்தில் ஆங்கிலம், மலாய், சீன மொழிகளுடன் தமிழும் இடம்பெற்றுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சிங்கப்பூரில் தமிழ் பயன்பாட்டில் இருந்ததைப் பறைசாற்றும் இந்த ஆவணமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
1825 முதல் 1873 வரை சிங்கப்பூரின் உள்கட்டமைப்பு உருவாக்கத்தில் இந்தியக் குற்றவாளிகள் தொழிலாளிகளாக ஆற்றிய பங்களிப்புகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. அவர்கள் அடைக்கப்பட்டிருந்த பிராஸ் பாசா சிறைச்சாலையை அவர்களே கட்டியபோது பயன்படுத்திய ‘AD 1853’ எனப் பொறிக்கப்பட்ட செங்கற்கள், மலபார் கடற்கரையைச் சேர்ந்த இந்திய முஸ்லிம் குடியேறி பயன்படுத்திய செங்கல் அச்சு, இஸ்தானா கட்டுமான நிழற்படம் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஓவியர் கோ சியா யோங் வரைந்த மரச்செதுக்கு ஓவியமும் இந்தியத் தொழிலாளர்களின் பங்களிப்பைப் பதிவுசெய்கிறது. மின்சாரக் கம்பிவடங்களைப் பதித்த தென்னிந்தியத் தொழிலாளர்களின் உழைப்பை அந்த ஓவியம் சித்திரிக்கிறது.
இரண்டாம் உலகப்போரின்போது சிங்கப்பூரின் அரசியல் அடையாளத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கும் பகுதியில், இந்திய தேசிய ராணுவத்தின் வரலாறும் இடம்பெற்றுள்ளது. 1943ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூருக்கு வந்து ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நிகழ்வும் அதில் இடம்பெறுகிறது.
இந்திய தேசிய ராணுவத்தின் ‘ஜான்சி ராணி’ பெண்கள் படைப்பிரிவில் தன்னார்வலராக இணைந்த ராசம்மா நவரத்தினம் (Rasamma Navarednam) அணிந்த ராணுவத் தொப்பியும் அதில் பொருத்தப்பட்டிருந்த சின்னமும் (badge)கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அச்சின்னத்தில் ‘ஒற்றுமை, நம்பிக்கை, தியாகம்’ (Ittefaq, Itmad, Kurbani) என்ற இந்திய தேசிய ராணுவத்தின் முழக்கம் பொறிக்கப்பட்டுள்ளது.
போருக்குப் பிந்திய காலத்தில் தமிழ் மொழியையும் சமூகச் சீர்திருத்தத்தையும் வலியுறுத்திய தமிழ் முரசு நாளிதழின் நிறுவனர் கோ.சாரங்கபாணி, 1958ல் பதிப்பித்த ‘தமிழ் முரசு ஆண்டு மலர்’ (Tamil Murasu Annual) இக்கூடத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
இளையரிடையே சமூக ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் வலியுறுத்தும் வகையில் பாவலர் ந.பழனிவேலு 1953ஆம் ஆண்டு எழுதிய ‘தம்பிக்கு’ கவிதையும் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
1959 முதல் 1964 வரை நடைபெற்ற ‘அனேகா ராகம் ராயத்’ பண்பாட்டு நிகழ்ச்சியில் பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் பரதநாட்டிய நிகழ்ச்சியைப் படம்பிடித்த நிழற்படமும் நடனக் கலைஞர் சாந்தா பாஸ்கரின் குடியுரிமை தொடர்பான வரலாற்றுப் பதிவுகளும் தமிழ்ச் சமூகத்தின் கலைப் பங்களிப்பையும் சமூக வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுகின்றன.
சிங்கப்பூரின் உணவுப் பண்பாட்டைப் பற்றிய பகுதியில், கேரளாவைச் சேர்ந்த எம்.ஜே. கோமஸ் சீன, இந்தியச் சமையல் முறைகளை இணைத்து உருவாக்கிய புகழ்பெற்ற மீன்தலைக் கறியின் வரலாறும் இடம்பெற்றுள்ளது.
‘இன்று நாம் யார்?’ என்ற காணொளி நேர்காணலில் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பலதரப்பட்ட பண்டிகைகளைக் கொண்டாடும் மகிழ்ச்சியை ஏழு வயதுச் சிறுவன் ஆதி மகேந்திரன் சிவபாலன் பகிர்வது, பன்முகக் கலாசாரச் சிங்கப்பூரின் நவீன அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சிங்கப்பூர்க் குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் வரலாற்றுக்கூடத்திற்கு எப்போதும் இலவச அனுமதி உண்டு. இது மீண்டும் திறக்கப்படுவதை முன்னிட்டு, அக்டோபர் 10 முதல் 12ஆம் தேதி வரை பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்படுகிறது.