📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 02, 2026 10:00 AM

பத்தா: விமர்சனம்

பத்தா: விமர்சனம்

’நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்த பாலாஜி தரணிதரன் - விஜய் சேதுபதி கூட்டணி, ‘சீதக்காதி’யின் தோல்விக்குப் பிறகு ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு தற்போது ‘பத்தா’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. பெரிய புரொமோஷன்களோ, ஆர்ப்பரிப்புகளோ இன்றி வெளியாகியிருக்கும் இப்படம் ஒரு நல்ல படத்துக்கு பகட்டான விளம்பரங்கள் எதுவும் தேவையில்லை என்பதை உணர்த்தி இருக்கிறது.

1986-ஆம் ஆண்டின் வடசென்னை பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இக்கதையில், பத்தா (விஜய் சேதுபதி) ஒரு பயங்கரமான உள்ளூர் ரவுடி. பார்ப்பவர்களை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கும் ரகம். தன்னை வெல்ல ஏரியாவில் யாரும் இல்லை என்ற அகம்பாவத்துடன், மனைவியை (லிஜோமோல் ஜோஸ்) கூட மதிக்காமல் திரிகிறார். மகள் வெளியே மிருகம் போல நடமாடும் அவர், தன் மகள் மீது உயிரையே வைத்துள்ளார்.

இன்னொரு பக்கம் சபரி (சாய் பிரித்விராஜ்) என்ற 8 வயது சிறுவன். தெருவில் ஒருவனை ரத்த வெள்ளத்தில் பத்தா அடிப்பதை பார்க்கும் சபரிக்கு, பத்தா என்பவர் மனித உருவில் இருக்கும் ஓர் இரக்கமற்ற மிருகம் என்று மனதில் பதிந்து விடுகிறது. இந்த இருவரது வாழ்வும் ஒரு கட்டத்தில் சந்திக்கும்போது ஒரு பூதாகரமான பிரச்சினை உருவெடுக்கிறது. இதன் பிறகு என்னவானது என்பதுதான் படத்தின் கதை.

“நம்மிடம் ஒரு பொருள் இருக்கும் வரை அதன் அருமையை நாம் உணர்வதில்லை, அது நம்மை விட்டுப் பிரியும்போதுதான் அதன் உண்மையான மதிப்பை உணர்கிறோம்” என்ற ஒரு வசனம் படத்தில் வருகிறது. இதை சுற்றித்தான் இயக்குநர் பாலாஜி தரணிதரனின் ‘பத்தா’ படம் எழுதப்பட்டிருக்கிறது.

மேலே சொல்லப்பட்ட படத்தின் கதை என்பது ஒரு துளிதான். இப்படித்தான் கதை செல்லப் போகிறது என்று நாம் யோசித்துக் கொண்டிருக்குபோதே சடாரென ஒரு பிரேக் அடித்து முற்றிலும் வேறு திசையில் நம்மை கொண்டு சென்று, நெகிழ வைத்து, அழவைத்து, குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்து இறுதியில் மனநிறைவுடன் அனுப்பி வைத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

பார்ப்பவர்களை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கும் ஒரு பயங்கரமான உள்ளூர் ரவுடி, அவனது ஆயுதங்கள், ஆட்கள், பயமுறுத்தும் பிம்பம், சுதந்திரம் என அனைத்தையும் பறித்து, தான் எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதை அவன் உணரும் கதைகளை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால், அதை இப்படியும் சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கிறார். அதுதான் இந்த படத்தை தமிழ் சினிமாவின் மிகவும் அசல் தன்மையுடைய, மனிதநேயமிக்க படைப்புகளில் ஒன்றாகவும் மாற்றி இருக்கிறது.

சமூகம் நமக்குக் கட்டாயப்படுத்தித் திணித்த முகமூடிகளை நாம் கழட்டி எறியும்போது உண்மையில் நாம் யார் என்கிற கேள்வி எழுகிறது. மற்றவர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்திய அந்த முகமூடியை நாம் ஏன் அணிந்துகொண்டோம் என்பதை வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் உணர்வதே இல்லை.

இப்படத்தின் மிகப் பெரிய பலமே இதன் நிதானமான திரைக்கதைதான். பாலாஜி தரணிதரன் பத்தாவுக்கும் அந்த சிறுவனுக்கும் இடையிலான நட்பை ஏனோதானோவென உருவாக்கவில்லை. நகைச்சுவை, நெகிழ்ச்சி, உணர்வுபூர்வ தருணங்கள் என இயல்பான காட்சிகள் மூலமே அதை வளர்த்தெடுக்கிறார்.

இந்தக் கதையை முழுக்க முழுக்க ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ போல காமெடி படமாக மாற்றி இருக்கக் கூடிய சூழல் இருந்தும் இயக்குநர் அதை செய்யவில்லை. அந்தச் சூழ்நிலையின் விசித்திரத்தில் இருக்கும் நகைச்சுவையை தேவைக்கு ஏற்ப அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காதலும் கடந்து போகும்' படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி தனக்கு மிகவும் கைவந்த ஒரு பாணிக்கு திரும்பியிருப்பது முதல் பாதியை மென்மையாக நகர்த்துகின்றது. வழக்கமான கேங்ஸ்டர் படமாகத் தொடங்கும் 'பத்தா', சபரி - பத்தா சம்பந்தப்பட்ட அந்த தனித்துவமான சம்பவத்துக்குப் பிறகே உயிர் பெறுகிறது.

முதல் பாதி நன்றாக இருந்தால் இரண்டாம் பாதி சொதப்பி விடும் என்பது அண்மைக் காலங்களில் தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியாக இருந்து வரும் சூழலில் (விதிவிலக்குகள் உண்டு) இரண்டாம் பாதியிலும் நம்மை அங்கிங்கு நகரவிடாமல் பிடித்து வைக்கிறது படம். ஒரு பயங்கரமான தாதாவிலிருந்து மென்மையான மனிதனாக அவர் மாறும் விதம் மிகவும் கவனமாக எழுதப்பட்டு, அழுத்தமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பாதியில் பத்தாவின் பார்வையில் கதையை நகர்த்தி ஒரு த்ரில்லராக மாற்றியிருக்கக் கூடிய சூழலில், கதையை சிக்கலாக்காமல், சிறுவன் சபரியின் கோணத்திலேயே கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.

முதல் 40 நிமிடங்களில் தற்செயலாகத் தோன்றும் ஒவ்வொரு சிறிய விஷயமும், இரண்டாம் பாதியில் குறிப்பாக க்ளைமாக்ஸில் கச்சிதமாகப் பொருந்துமாறு திரைக்கதையை அமைத்துள்ளார்.

க்ளைமாக்ஸுக்கு முன்னால் விஜய் சேதுபதியிடம் சிறுவன் பேசும் அந்த காட்சி யாரையும் கலங்கடித்து விடும். அதை தொடங்கிய விதமும், முடித்த விதமும் அப்ளாஸ் ரகம்.

விஜய் சேதுபதிக்கு அல்வா சாப்பிடுவது போன்ற கதாபாத்திரம். தனது வழக்கமான நடிப்பையே அவர் இதிலும் வெளிப்படுத்தி இருந்தாலும் இப்படி ஒரு கதையில் அவரை தவிர யாரும் நடித்திருக்க முடியாது என்பதை அறுதியிட்டு கூறலாம். 'சூப்பர் டீலக்ஸ்', 'விக்ரம் வேதா', ‘மகாராஜா’ படங்களின் வரிசையில் அவருக்கு இது ஓர் அழுத்தமான மீள் வருகை.

படத்தின் மிகப் பெரிய ஆச்சரியம் சிறுவன் சாய் பிரித்விராஜ். இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதிக்கு ஈடுகொடுத்து, கிரிஞ்ச் நடிப்பாக மாறிவிடாமல், கண்கள் அகல விரியும் அசல் தன்மையோடு தன் இயல்பான நடிப்பால் நம் மனதைத் தொடுகிறார்.

லிஜோமோல் ஜோஸுக்கு மிக அழுத்தமான கதாபாத்திரம். அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். அஜய் கோஷ், அர்ஜுன் சிதம்பரம், சாந்தி பாலச்சந்திரன் மற்றும் ஹரி கிருஷ்ணன், தீபா வெங்கட், விஜய் சேதுபதியின் நண்பர்களாக வரும் இரண்டு இளைஞர்கள் என அனைவருமே தங்களின் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

சாய் அபயங்கரின் பின்னணி இசையும், செல்வகுமாரின் ஒளிப்பதிவும் படத்துக்கு பக்க பலம். குறிப்பாக ‘தங்கமே மகளே’ பாடலும் அதை படத்தில் பயன்படுத்திய விதமும் சிறப்பு.

இன்றைய அவசர உலகத்தில், சுற்றி இருப்பவர்களை கூட கவனிக்காமல் மொபைல் போன்களில் மூழ்கி நொடிப் பொழுதில் முடிவெடுக்கும் காலகட்டத்தில் ‘பத்தா’ போன்ற ஒரு படம் மிகவும் அவசியமானது.

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், தேவையில்லான ரொமான்ஸ், நாயக வழிபாடு என எதுவும் இல்லாமல், முழுக்க முழுக்க மனிதநேயத்தை வலியுறுத்தும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட ஓர் அரிய தமிழ்த் திரைப்படம் ‘பத்தா’.

பாலாஜி தரணிதரனின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வந்திருக்கும் இப்படம், தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களுக்கு பேசப்படப் போகும் படைப்பு.