குடும்பங்களிடமிருந்து நாம் நிறையப் பெற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் வேண்டும்: கர்தினால் Mario Grech
குடும்பங்களிடமிருந்து நாம் நிறையப் பெற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் வேண்டும்: கர்தினால் Mario Grech
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட அன்பின் மகிழ்ச்சி திருத்தூது அறிவுரை மடலின் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்டோபர் 8ஆம் நாள் இடம்பெற்ற சந்திப்பின் இரண்டாம் நாளில், இன்றைய குடும்பங்களின் வாழ்வியல், அழகு மற்றும் சவால்கள் குறித்து ஆயர்கள் சிந்தித்தனர்.
குடும்ப வாழ்வைப் பாதிக்கும் பண்பாட்டு, பொருளாதார மற்றும் சமூகச் சூழல்களை ஆயர்கள் ஆராய்ந்து, குடும்பங்களுக்கு திருஅவை எவ்வாறு சிறப்பாக ஆதரவளிக்க முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும் என்று கர்தினால் கெவின் ஃபாரல் அவர்கள் வலியுறுத்தினார்.
குடும்பங்களின் அனுபவங்களுக்குச் செவிமடுத்து, அவர்களின் அன்றாடப் போராட்டங்களைப் புரிந்துகொண்டு, திருமண வாழ்வுக்கும் குடும்பங்களுக்கும் நம்பிக்கையளிக்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலரான கர்தினால் Mario Grech அவர்கள், திருஅவையின் மறைப்பணிக்கு வழிகாட்ட வேண்டிய மூன்று முக்கிய குரல்களாக நற்செய்தி, திருஅவையின் அதிகாரப்பூர்வப் போதனைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்வியல் அனுபவங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.
குடும்பங்கள் திருஅவையின் மறைப்பணியைப் பெறுபவர்கள் மட்டுமல்ல; அப்பணியில் பங்கேற்பவர்களும்கூட என்று தெரிவித்த அவர், குடும்பங்களிடமிருந்து திருஅவை நிறையப் பெற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் வேண்டும் என்றார்.
குடும்பங்கள் துன்பங்கள், நிச்சயமற்ற நிலைகள், உறவுச் சிக்கல்கள் மற்றும் சமூக அழுத்தங்களை எதிர்கொண்டாலும், அன்பு, உறவுநிலை, நிலையான வாழ்க்கை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கான ஏக்கம் அவர்களிடம் தொடர்ந்து இருப்பதாகக் குறிப்பிட்டார்.
குடும்பங்களின் அனுபவங்களுக்குச் செவிமடுத்து, அவற்றின் வழியாகத் தூய ஆவியார் வழங்கும் வழிகாட்டுதலைக் கண்டறிந்து, அதற்கேற்ப திருஅவையின் குடும்ப மறைப்பணியை முன்னெடுக்க வேண்டும் என்றும் கர்தினால் Grech அவர்கள் அழைப்பு விடுத்தார்.