Mandaadi Day 3 Box Office
சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்த சூரி இப்போது ஹீரோவாக ஜொலித்துவருகிறார். கடந்த வருடத்தில் அவர் நடித்த மாமன் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக மண்டாடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். செப்டம்பர் மாதம் படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் இன்று அவர் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து சினிமாவில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தவர் சூரி. சங்கமம், காதல், தீபாவளி என ஏராளமான படங்களில் சின்ன சின்ன ரோல்களை செய்த அவருக்கு; வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை தந்தது. புரோட்டா சாப்பிடும் காமெடி அவரது நீண்ட கால பசியை தீர்த்து வைத்தது என்றே சொல்ல வேண்டும். அந்தப் படத்திலிருந்து சூரியின் காட்டில் மழைதான் பெய்ய ஆரம்பித்தது. விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியில் கலக்க ஆரம்பித்தார்.
சூரியின் மாற்றம்: தொடர்ச்சியாக காமெடியில் ஜொலித்த அவருக்கு கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முதல் படமே வெற்றிமாறனின் இயக்கமாகும். தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சூப்பராக நடித்திருந்தார். படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அப்போதிருந்து காமெடி ரோல்களை மூட்டை கட்டிவிட்டு கதையின் நாயகனாக தொடர்ந்துவருகிறார். அப்படி அவர் நடித்த கொட்டுக்காளி, கருடன் படங்கள் எல்லாம் அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸையே கொடுத்தன. மாமன் படம் மட்டும் கொஞ்சம் அப்படி இப்படி என விமர்சனத்தை சந்தித்தது.
மண்டாடி சூரி: இப்போது அவர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு படமானது தியேட்டர்களில் வெளியானது. மொத்தம் 5 மொழிகளில் இப்படம் ரிலீஸாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி இருக்கு படம்?: மீனவர்களின் வாழ்வியலில் கலந்திருக்கும் பாய்மர படகு போட்டியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சீனையும் டீட்டெயிலிங்கோடு செய்திருந்த இயக்குநர்; சூரியை பக்கா மாஸ் ஹீரோவாகவே உயர்த்திவிட்டார். ஏகப்பட்ட மாஸ் மொமன்ட்ஸ்களை சரியாக பயன்படுத்திக்கொண்ட சூரி; கண்டிப்பாக கமர்ஷியல் ஹீரோவாக இன்னும் சில வருடங்களுக்கு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் வசூல் நிலவரம்: இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி மூன்றாவது நாளான நேற்று 9 கோடியே 25 லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறதாம். முதல் இரண்டு நாட்களில் படத்துக்கு மிகப்பெரிய பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்ததன் காரணமாக நேற்று கூட்டம் அலைமோதியது. மொத்தம் அந்தப் படம் மூன்று நாட்களில் 20 கோடியே 80 லட்சம் ரூபாய் வசூலித்திருப்பதாக அந்த தளம் தெரிவித்திருக்கிறது.