மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ், சாகசம்: சென்னையில் 2,000 பைக்குகள் பறிமுதல்
சென்னை: சென்னையின் முக்கிய சாலைகளில் இரவு நேரங்களில் பைக்ரேஸ் மற்றும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் கடந்த 3 நாட்களில் 2 ஆயிரம் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அண்ணாசாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை உள்பட பல முக்கிய சாலைகளில் இரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் சென்று ரேசில் ஈடுபடுகின்றனர். மேலும், ஆபத்தை உணராமல் வீலிங் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்தில் உறைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி, சாலைவிதிகளை முறையாக கடைபிடித்து செல்லும் பொதுமக்களும் இதுபோன்ற சாகசங்களால் விபத்தில் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் 4-ம் தேதி அதிகாலை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே 15 முதல் 20 இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் திரண்டு, பொதுமக்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தி, 16 இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாகசத்துக்குப் பயன்படுத்தப்பட்ட 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள், போலீஸாரிடம் சிக்காமல் இருக்க வாகனங்களில் பதிவு எண் பலகை இல்லாமல் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பைக் ரேஸ் மற்றும் சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி தலைமையில் போக்குவரத்து போலீஸார் கடந்த 3 நாட்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பைக் ரேஸ், சாகசம் மற்றும் பதிவு எண் பலகை இல்லாமல் இயக்கப்பட்ட 2 ஆயிரம் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலும் வீலிங், பைக் ரேஸ் மற்றும் பிறபோக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.