கேரளச் சாலை விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் மரணம்
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் நள்ளிரவில் நேர்ந்த விபத்தில், கேரளாவுக்குச் சுற்றுலா சென்ற திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கல்லூரி மாணவர்கள் ஏழு பேரும் ஒரே காரில் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றனர். வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) நள்ளிரவு நேரத்தில் திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, வெளிச்சம் இல்லாத திருப்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் மீது அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஏழு மாணவர்கள், ஓட்டுநர் உட்பட எட்டுப் பேரும் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர்; இரண்டு மாணவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களைத் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் காரை வெட்டி மீட்டனர்.
அவர்களது அடையாள அட்டைகள் மூலம் திண்டுக்கல்லைச் சேர்ந்த யுவ சஞ்சித், சூர்யா, மதுரையைச் சேர்ந்த பிரசன்னா, சேலத்தைச் சேர்ந்த விஷ்வா, சந்தோஷ், ஜோஸ்வா ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர்.
மீதமுள்ள இருவரின் முகவரிகளை அறியக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலைச் சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற இடத்தில் எச்சரிக்கை பலகைகள் வைக்காததே விபத்து நேர்ந்ததற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.