📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 04, 2026 12:00 PM

இண்டியா கூட்டணி கூட்டத்தில் முதன்முறையாக தவெக பங்கேற்பு

இண்டியா கூட்டணி கூட்டத்தில் முதன்முறையாக தவெக பங்கேற்பு

சென்னை: தமிழக அளவில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், கூட்டணிக் கட்சித் தலைவர்களான வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், இண்டியா கூட்டணியில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள தவெகவுக்கு மனப்பூர்வ வரவேற்பு தெரிவிக்கப்பட்டதுடன், இந்த அரசியல் முடிவை எடுத்த முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் (எஸ்ஐஆர்) என்ற பெயரில் ஜனநாயகத்தைச் சீர்குலைப்பதாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி, ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற பெயரில் அக்டோபர் 13, 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 15ஆம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இண்டியா கூட்டணியில் திமுக அங்கமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தனியாகவே போராடுவோம் என்றும் திமுக செய்தித் தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.