📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 04, 2026 12:03 PM

நம்பர் 1 டி20 பவுலராக இருந்தவர் ஆனா இப்போ நிலைமையே வேற.. ரவி பிஷ்னோயின் வீழ்ச்சிக்கு காரணமே இதுதான்

நம்பர் 1 டி20 பவுலராக இருந்தவர் ஆனா இப்போ நிலைமையே வேற.. ரவி பிஷ்னோயின் வீழ்ச்சிக்கு காரணமே இதுதான்

நம்பர் 1 டி20 பவுலராக இருந்தவர் ஆனா இப்போ நிலைமையே வேற.. ரவி பிஷ்னோயின் வீழ்ச்சிக்கு காரணமே இதுதான்

சென்னை: கடந்த 2023 டிசம்பரில் சர்வதேச டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 இடத்தை பிடித்து கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய். ஆனால், சர்வதேச அரங்கில் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது பந்துவீச்சு வளர்ச்சி அடைவதற்கு பதிலாக நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி தங்கப் பதக்க போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் குவித்தது. சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் பாகிஸ்தான் அணி 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அந்த நேரத்தில் பந்துவீச வந்த ரவி பிஷ்னோய், தனது 3 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 44 ரன்களை வாரி வழங்கினார். அவரது ஓவரில் சரமாரியாக பவுண்டரிகளும் சிக்சர்களும் பறந்ததால், தோல்வியின் விளிம்பில் இருந்த பாகிஸ்தான் அணி 192 ரன்கள் வரை முன்னேறி இந்திய அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருந்த ரவி பிஷ்னோய், இன்று தனி ஆளாக போட்டியை காலி செய்யும் பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார்.

சர்வதேச டி20 போட்டிகளில் ரவி பிஷ்னோயின் முதல் இரண்டு ஆண்டுகளும், தற்போதைய நிலவரமும் தலைகீழாக மாறியுள்ளன.

அவரது சர்வதேச அறிமுக ஆண்டோடு ஒப்பிடும்போது, தற்போது ஒரு விக்கெட்டை வீழ்த்த கூடுதலாக 14 ரன்களை வாரி வழங்குகிறார். ஐபிஎல் தொடரிலும் இதே நிலைதான். 2021 இல் வெறும் 6.39 ஆக இருந்த அவரது எகானமி, 2025 இல் 10.84 ஆகவும், 2026 இல் 9.88 ஆகவும் மோசமாகியுள்ளது.

ரவி பிஷ்னோயின் மிகப்பெரிய பலவீனமே அவரிடம் புதிய பந்துவீச்சு உத்திகள் இல்லாததுதான். அவர் தொடர்ந்து கூக்ளி வகை பந்துகளையே அளவுக்கு அதிகமாக நம்பியுள்ளார். ஆரம்பத்தில் பேட்டர்கள் திணறினாலும், இப்போது சர்வதேச பேட்டர்கள் அவரது பந்துவீச்சு நுணுக்கங்களை மிக எளிதாக கணித்து விளாசி தள்ளுகின்றனர்.

2022 ஆம் ஆண்டிலேயே பாரம்பரிய லெக்-ஸ்பின் பந்துகளை கற்றுக்கொண்டு வீசுவேன் என்று கூறிய ரவி பிஷ்னோய், 4 ஆண்டுகள் கடந்தும் தனது பந்துவீச்சில் எந்த புதிய மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, ஆரம்பத்தில் சொதப்பி அணியை விட்டு நீக்கப்பட்டார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டிற்கு சென்று தனது பந்துவீச்சு முறை, புதிய திருப்பங்கள் மற்றும் லென்த் ஆகியவற்றை மாற்றி அமைத்து, இன்று இந்தியாவின் அசைக்க முடியாத முன்னணி சுழற்பந்து வீச்சாளராக கம்பேக் கொடுத்துள்ளார்.

ஆனால் ரவி பிஷ்னோய் தன்னைத்தானே மெருகேற்றிக் கொள்ளாமல், ஒரே மாதிரியான பந்துவீச்சை தொடர்ந்து வீசி வருவதால் பேட்டர்களுக்கு எளிதான இலக்காக மாறிவிட்டார். இனியும் தனது பந்துவீச்சில் புதிய யுக்திகளை புகுத்தாவிட்டால், 2026 டி20 உலகக்கோப்பை மற்றும் எதிர்கால இந்திய அணியில் அவரது இடம் முற்றிலும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.