"இந்திய அணியிலிருந்து நீக்கியபோதுதான் செய்த தப்பை..".. இஷான் கிஷன் உருக்கமான பேச்சு
"இந்திய அணியிலிருந்து நீக்கியபோதுதான் செய்த தப்பை..".. இஷான் கிஷன் உருக்கமான பேச்சு
லக்னோ: இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகுதான் தான் செய்த தவறுகளின் தீவிரத்தை உணர்ந்ததாக நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் மனம் திறந்து பேசியுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது ஓய்வு கேட்ட இஷான் கிஷன், அதன்பின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டிகளிலும் விளையாடாமல் புறக்கணித்தார். இதனால் இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட அவர், பிசிசிஐயின் தேசிய அணி ஒப்பந்தத்தையும் இழந்தார்.
இதை அடுத்து உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று, கடினமாக உழைத்து ரன்களைக் குவித்ததன் மூலம், 2026 ஜனவரியில் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்தார் இஷான் கிஷன். தற்போது சர்வதேச டி20 அரங்கில் தொடர்ச்சியாக ரன் குவித்து தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இஷான் கிஷன் கூறுகையில், "இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட போதுதான் நான் செய்த தவறுகளின் தீவிரத்தை உணர்ந்தேன். அதன்பிறகு எனது பேட்டிங் நுணுக்கங்கள் மற்றும் உடற்தகுதியை மேம்படுத்த தீவிரமாக உழைத்தேன். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடினால் மட்டுமே மீண்டும் தேசிய அணியின் கதவுகள் திறக்கும் என்பதை அறிந்து பொறுமையுடன் விளையாடினேன்.
மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பிய பிறகு, மீண்டும் நீக்கப்படுவோமா என்ற அச்சம் எனக்கு நிச்சயம் இல்லை. களத்தில் கிரிக்கெட்டை முழுமையாக ரசித்து விளையாடுவதும், அணிக்காக ரன் சேர்ப்பதுமே எனது முக்கிய கடமையாக வைத்துள்ளேன்." என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடிய போது இஷான் கிஷன் அவரை ஆட விட்டு சற்று நிதானமாக ஆடினார். ஸ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் சதம் அடித்த நிலையில் இஷான் கிஷன் 27பந்துகளில் 37 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
அது பற்றி பேசிய இஷான் கிஷன், "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான ஃபார்மில் சிக்சர்களைப் பறக்கவிட்டார். மறுமுனையில் இருக்கும் வீரர் அதிவேகத்தில் ஆடும்போது, அவருக்கு அதிக ஸ்ட்ரைக் வழங்கி நான் அமைதியாக ஆடுவதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அவருடன் இணைந்து ஆட்டமிழக்காமல் 137 ரன்கள் சேர்த்து 172 ரன் இலக்கை 14.4 ஓவர்களில் எட்டியது பெருமை அளிக்கிறது" என்று கூறினார்.