முதல்வர் முதல் பிரதமர் வரை.. மோடியின் 25 ஆண்டு பயணம்.. அரசியலில் சாதித்தது என்ன?
முதல்வர் முதல் பிரதமர் வரை.. மோடியின் 25 ஆண்டு பயணம்.. அரசியலில் சாதித்தது என்ன?
உலகம் கவர்ந்த இந்திய பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, அரசின் தலைமைப் பொறுப்பிற்கு வந்து நேற்றுடன் (அக்.7) 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தொடர்ச்சியாக அரசின் தலைமைப் பதவியிலான அவருடைய ஆட்சிக்காலத்தில், இந்தியா அடைந்த வளர்ச்சிகள் என்ன? இந்தக் கட்டுரையில் காணலாம்.
பிரதமர் நரேந்திர மோடி 2001 அக்டோபர் 7 அன்று குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்றார். 2014-இல் தேசிய அரசியலில் நுழைவதற்கு முன்பு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் நீடித்தார். அவருடைய அந்த 12 ஆண்டுக்கால ஆட்சியில், அம்மாநிலத்தின் பெயர் தேசிய அளவில் பேசுபொருளாக இருந்தது. குஜராத் வளர்ச்சி என்ற முழக்கத்தை பாஜக முன்னெடுத்தது. அதுவே, அவரை தேசிய அரசியலுக்கும் இட்டுச் சென்றது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய அவர், தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றிக்கு வழிநடத்தி, இன்றுவரை பிரதமராக பதவியில் உள்ளார். இதன்மூலம் அவருடைய அரசியல் பயணம் வெள்ளிவிழா கண்டுள்ளது.
ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை அரசாங்கத்தை வழிநடத்திய முதல் பிரதமராகவும் மோடியே உள்ளார். உலகம் முழுவதும் சாதனை நாயகராகத் திகழும் பிரதமர் மோடியின் இந்த அரசியல் காலகட்டத்தில் அதிரடியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு முறைப்படுத்தப்படுத்துவதற்காக 'ஒரே நாடு, ஒரே வரி' கொள்கையின் கீழ் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜன்தன் வங்கிக் கணக்குகள், ஆதார் மற்றும் மொபைல் எண்களை இணைத்து நேரடி மானிய உதவி திட்டம் மூலம் அரசு உதவிகள் இடைத்தரகர்களின்றி நேரடியாக மக்களைச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் வேகம் இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வந்தே பாரத் அதிவேக ரயில்கள் மற்றும் ரயில் பாதைகள் மின்மயமாக்கல் முக்கிய திட்டங்களாக உள்ளன.
ஏழை எளிய மக்களுக்கு நிரந்தர வீடுகள் மற்றும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் ஆகியன வரவேற்பைப் பெற்றுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உலகளவில் ஈர்க்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம்தாங்கிப் போர்க்கப்பல் உட்பட பல தற்காப்புக் கருவிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, பாதுகாப்புத் துறை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. சந்திரயான்-3 மூலம் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு என்ற சாதனை, ஆதித்யா-எல்1 சூரிய ஆராய்ச்சி மற்றும் ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டங்களும் வெற்றிபெற்றுள்ளன. 2016-ஆம் ஆண்டின் துல்லியத் தாக்குதல்கள், 2019-ஆம் ஆண்டின் பாலகோட் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் 2025-ஆம் ஆண்டின் சிந்துர் நடவடிக்கை ஆகியனவும் இந்தியாவின் பாதுகாப்பை வெளியுலகுக்கு நிரூபித்தது.
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது, பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி பதவி உருவாக்கம் மற்றும் மாவோயிச வன்முறைக்கு எதிராக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளும் கவனம் பெற்றன. மேலும், சர்வதேச அரங்கில், ஜி20 மற்றும் பிரிக்ஸ் அமைப்புகளில் இந்தியாவின் பங்கும் உலகைத் திரும்பிப் பார்க்கவைத்தது.