IND vs PAK: நக்வி
IND vs PAK: நக்வி-யை நோஸ் கட் செய்த ஜெய் ஷா.. இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வழங்க நேரில் வந்தார்
நிஷின்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றதைத் தொடர்ந்து, மைதானத்தில் நடைபெற்ற பதக்கம் அளிக்கும் விழாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா நேரில் பங்கேற்று இந்திய வீரர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கி கவுரவித்துள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மோஷின் நக்வி இந்த விழாவில் தலைகாட்டாததால், கடந்த காலங்களில் நடந்தது போன்ற எந்தவித சர்ச்சைகளும் இன்றி பதக்க விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
ஜப்பானின் நிஷின் நகரில் தங்கப் பதக்கப் போட்டி முடிந்ததும் பதக்க வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 3வது இடம் பிடித்த இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ஜப்பான் நாட்டின் விளையாட்டு அதிகாரி பதக்கங்களை அணிவித்தார்.
தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா தங்கப் பதக்கங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா, அபிஷேக் சர்மா, திலக் வர்மா உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் ஜெய் ஷாவிடமிருந்து தங்கப் பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.
கடந்த காலங்களில் ஆசிய கோப்பை தொடர்களில் இந்திய அணிகள் வெற்றி பெற்ற போது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்கவோ அல்லது அவருடன் மேடையை பகிர்ந்து கொள்ளவோ இந்திய வீரர்கள் மறுத்து வந்தனர். நக்வி இந்தியாவுக்கு சொந்தமான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் ஆசிய கோப்பைகளை வேறு அதிகாரிகளை வைத்து வழங்காமல் எடுத்துச் சென்றார். இதனால் பெரும் சர்ச்சை வெடிப்பது வழக்கமாக இருந்தது.
ஆனால் இம்முறை நிஷின் மைதானத்தில் மோஷின் நக்வி எங்குமே தென்படவில்லை. அவருக்கு பதிலாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா நேரில் வந்து பதக்கங்களை வழங்கியதால், எந்தவித தேவையற்ற சலசலப்புகளும் இன்றி இந்திய அணி தங்கப் பதக்கத்தை பெற்றது.