இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்தில் பள்ளிகளுக்கு அக்டோபர் 5, 6 விடுமுறை
இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்தில் பள்ளிகளுக்கு அக்டோபர் 5, 6 விடுமுறை
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Published : October 2, 2026 at 4:35 PM IST
சென்னை: இடைத்தேர்தல் நடைபெற்றவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் 5 மற்றும் 6 தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”செங்கல்பட்டு மாவட்டத்தில் 2026 சட்டமன்ற இடைத்தேர்தல் மதுராந்தகம் தொகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி அன்று நடைபெற இருப்பதால், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு 5.10.2026 மற்றும் 6.10.2026 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும், மதுராந்தகம் தொகுதியில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு 6.10.2026 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.
மதுராந்தகம் சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணிபுரிய உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கும் 5.10.2026, 6.10.2026 மற்றும் 7.10.2026 அன்று பிற பணி சலுகை வழங்கப்படுகிறது.
பிற ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் வாக்குரிமை இருந்தால், அவர்களுக்கு 6.10.2020 அன்று ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும். மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி தவிர்த்து, பிற பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்” என தெரிவித்துள்ளார்.
தாராபுரம் தொகுதி பள்ளிகளுக்கு விடுமுறை
அதேபோல், திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் 6.10.2026 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 6ஆம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் பணியாளர்களில் வாக்காளர்களாக உள்ளவர்களுக்கு 6ஆம் தேதி அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் வாக்குச் சாவடி மையங்களாக செயல்பட உள்ள 165 பள்ளிகளுக்கும் 5 மற்றும் 6 ஆகிய நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள 1,266 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு 5 மற்றும் 6ஆம் தேதி இரண்டு நாட்களுக்கு ON DUTY வழங்கப்படும்.
வாக்குச்சாவடி அலுவலர் பணியில் உள்ள ஆசிரியர்கள் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணிபுரியும் பள்ளிகளில் பள்ளி வேலை நாட்களாக இயங்க இயலாத நிலையில் உள்ள தாராபுரத்தில் 266 பள்ளிகளும், திருப்பூர் 61 பள்ளிகளும் மற்றும் அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைச் சார்ந்த 21 பள்ளிகளுக்கும் என மொத்தம் 348 பள்ளிகளுக்கும் அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகள் தவிர பிற பள்ளிகள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டு செயல்பட வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.