IND vs WI: ராகுல் டிராவிட்டின் 27 ஆண்டுக்கால சாதனையை சமன் செய்த கேஎல் ராகுல்
IND vs WI: ராகுல் டிராவிட்டின் 27 ஆண்டுக்கால சாதனையை சமன் செய்த கேஎல் ராகுல்
சண்டிகர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுல் அபார சதம் விளாசி அசத்தியுள்ளார். சண்டிகரில் உள்ள பிசிஏ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், வெறும் 79 பந்துகளில் அவர் தனது சதத்தை நிறைவு செய்தார். இந்த மிரட்டலான ஆட்டத்தின் மூலம் ராகுல், ராகுல் டிராவிட்டின் 27 ஆண்டு கால சாதனையை சமன் செய்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விக்கெட் கீப்பர் பேட்டராக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை கர்நாடகாவைச் சேர்ந்த கேஎல் ராகுல் பெற்றுள்ளார்.முன்னதாக, டிராவிட் விக்கெட் கீப்பர்-பேட்டராக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு ஒருநாள் சதங்களை அடித்துள்ளார். அவர் 1999-ல் சிங்கப்பூரில் ஆட்டமிழக்காமல் 103 ரன்களும், 2002-ல் அகமதாபாத்தில் ஆட்டமிழக்காமல் 109 ரன்களும் எடுத்திருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர்களின் சிறந்த ஒருநாள் ஸ்கோர்களைப் பொறுத்தவரை, கே.எல். ராகுல் 129* ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த இடங்களில் ராகுல் டிராவிட் முறையே 109 ரன்களுடனும் , 103* ரன்களுடனும் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து தோனி 95 ரன்களுடனும் , சமீர் திகே 94* ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் அடித்த இந்த சதத்தின் மூலம், சண்டிகரில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ராகுல் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக, ஜூன் 2026-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இதே மைதானத்தில் அவர் ஒரு டெஸ்ட் சதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கெட் கீப்பர்-பேட்டராக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்த சாதனை இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் வசம் உள்ளது. அவர் ஜார்ஜில் 77 பந்துகளில் 150 ரன்கள் குவித்திருந்தார்.
தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் 149 ரன்களுடனும். ஜிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர் 138 ரன்களுடனும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர். தற்போது 129* ரன்கள் எடுத்துள்ள இந்திய வீரர் கேஎல் ராகுல் இந்த சர்வதேச பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.இவர்களைத் தொடர்ந்து பாகிஸ்தானின் கம்ரான் அக்மல் 124 ரன்களுடனும், இந்தியாவின் ராகுல் டிராவிட் 109* ரன்களுடனும் இருக்கின்றனர்.