ஆர்டிஐ மனுக்களுக்கு கூடுதல் கட்டணம்
ஆர்டிஐ மனுக்களுக்கு கூடுதல் கட்டணம் - அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
நேரடியாக பெறப்படும் ஆர்டிஐ மனுக்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் வகையில், ’ஆர்டிஐ செல்’ என்ற அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.
Published : October 2, 2026 at 4:06 PM IST
சென்னை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் இணையதளம் வாயிலாக பெறப்படும் மனுக்களுக்கு உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூடுதல் கட்டணம் தேவைப்பட்டால் அதனை இணையதளம் வாயிலாகவே கோர வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அரசு முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி, அனைத்துத் தலைமைச் செயலகத் துறைகளின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்தக் கடிதத்தில் தமிழகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இணையவழியில் விண்ணப்பித்து தகவல்களைப் பெறும் வகையில் rtionline.tn.gov.in என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இணையதளம் மூலம் பெறப்படும் ஆர்டிஐ மனுக்களுக்கு உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பல்வேறு புகார்கள் பெறப்படுகிறது. இதையடுத்து, இணையவழியாக பெறப்படும் ஆர்டிஐ மனுக்களுக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில், அதனை முறையாகப் பயன்படுத்தி மனுக்களுக்கு உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர் செலுத்த வேண்டிய கூடுதல் கட்டணம் ஏதேனும் இருந்தால், அதனை இணையதளம் மூலமாகவே செலுத்துமாறு கோர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் செலுத்துவதற்காக தனியாக கடிதம் மூலம் விண்ணப்பதாரருக்கு தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
RTI CELL என்ற புதிய வசதி உருவாக்கம்
இணையதளத்தில் RTI CELL என்ற புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அலுவலகங்களில் நேரடியாக பெறப்படும் ஆர்டிஐ மனுக்கள் மற்றும் முதல் மேல்முறையீட்டு மனுக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, இணையவழி மனு எண்ணை உருவாக்க முடியும்.
அதன்பிறகு, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் அல்லது மேல்முறையீட்டு அலுவலருக்கு இணையதளம் மூலமாகவே அனுப்பி நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், நேரடியாக பெறப்பட்ட மனு வேறு பொது அதிகார அமைப்பின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்தால், அதனை சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு இணையதளம் மூலமாகவே மாற்றவும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக பெறப்படும் ஆர்டிஐ மனுக்களுக்கு பதில் அளிக்கும்போது, மனுதாரருக்கு வழக்கமான கடிதம் மூலம் தகவல் வழங்குவதுடன், அந்த விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம், பெறப்பட்ட மனுக்கள், பிற பொது அதிகார அமைப்புகளுக்கு மாற்றப்பட்ட மனுக்கள், கட்டணம் அல்லது கூடுதல் கட்டணம் நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் தகவல் வழங்கி முடித்து வைக்கப்பட்ட மனுக்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களை எளிதாகப் பராமரிக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை அனைத்து தலைமைச் செயலகத் துறைகளும், அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து சார்நிலை அலுவலகங்களும் முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. நடைமுறை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு தேசிய தகவலியல் மையம், சென்னை மற்றும் மனித வள மேலாண்மைத் துறையை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.