‘ஏஐ’ மாதிரிகளின் பாதுகாப்பை மதிப்பிட ‘ஆந்த்ரோபிக்’ உடன் சிங்கப்பூர் ஒப்பந்தம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரிகளின் பாதுகாப்பை மதிப்பீடு செய்யும் நோக்கில் தொழில் நுட்பப் பரிமாற்றங்களை மேற்கொள்ள சிங்கப்பூர் அரசிடம் ஆந்த்ரோபிக் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
சான் ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்த அந்தச் செயற்கை நுண்ணறிவு ஆய்வு நிறுவனம், சிங்கப்பூர் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் திறன் மேம்பாடு, பொறுப்பான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கேப்பெல்லா சிங்கப்பூரில் புதன்கிழமை (அக்டோபர் 14) தமது உள்ளூர் கிளை அலுவலகத்தில் அதிகாரபூர்வமாக ஆந்த்ரோபிக் தொடங்கியது.
அதன் திறப்பு விழாவில் ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தென்கொரியா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் திறக்கப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் ஐந்தாவது அலுவலகம் இதுவாகும்.
சிங்கப்பூரில் உள்ள சிறந்த தொழில்நுட்பத் திறனாளர்கள், வலுவான ஆராய்ச்சி நிறுவனங்கள், உயர் தரத்திலான நம்பிக்கைச் சூழல் ஆகியவை இந்தப் புதிய அலுவலகத் தொடக்கத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டன.
சிங்கப்பூரில் ‘கிளாட்’ செயற்கை நுண்ணறிவு மாதிரியின் பயன்பாடு அதன் மக்கள்தொகையோடு ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக உள்ளது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு, டிபிஎஸ் வங்கி, கிராப், சீ குழுமம் போன்ற முன்னணிச் சிங்கப்பூர் நிறுவனங்களுடன் அந்நிறுவனம் ஏற்கெனவே இணைந்து செயல்படுகிறது.
மனித மேற்பார்வையின்றி இயங்கும் செயற்கை நுண்ணறிவுச் செயலிகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த உலகளாவிய விவாதங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ராஃபிள்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அந்தப் புதிய அலுவலகத்திற்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், இணையப் பாதுகாப்புச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கங்களுடன் உடனடியாகப் பகிர்ந்துகொள்ள ‘ஆந்த்ரோபிக்’ முழுமையாக உறுதியளித்துள்ளது.
சிங்கப்பூர் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் கிளாட் தொழில்நுட்பத்தை இணைக்கவும் அரசாங்க அதிகாரிகளுக்குச் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை ஊட்டவும் தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.