📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 14, 2026 06:05 PM

சிங்கப்பூரின் எதிர்காலம்: அடுத்த தலைமுறையின் அவசியம்

சிங்கப்பூரின் எதிர்காலம்: அடுத்த தலைமுறையின் அவசியம்

சிங்கப்பூர் நமக்கு முக்கியம் என்றால், நாம் அதிக முயற்சியுடன் கட்டியெழுப்பிய இந்த நாட்டைப் பொறுப்பேற்கும் அடுத்த தலைமுறை நிச்சயம் இருந்தாக வேண்டும் என்று தற்காலிக மனிதவள அமைச்சரும் அரசாங்கத் தொழில்நுட்ப (கவ்டெக்) அமைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி ஜாஸ்மின் லாவ் வலியுறுத்தியுள்ளார்.

தெமாசெக் கடைவீடு வளாகத்தில் புதன்கிழமை (அக்டோபர் 14) நடைபெற்ற இளம் சிங்கப்பூரர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் கலந்துரையாடலில் அவர் அந்தக் கருத்தை முன்வைத்தார்.

கொள்கை ஆய்வுக் கழகத்தால் ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த மாநாட்டின் கருப்பொருள் ‘எதிர்காலத்தை உருவாக்குபவர்கள்’. இவ்வாண்டு மாநாடு, குறைந்துவரும் மொத்தக் கருவள விகிதத்தில் கவனம் செலுத்தியது.

குழந்தைகளுக்காகத் திட்டமிடுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரம் என்று திருவாட்டி லாவ் கூறினார்.

“இதில் அரசாங்கம் தலையிட வேண்டியதில்லை,” என்றார் அவர்.

இருப்பினும், குழந்தைகள் பற்றிப் பேசாமல் இருந்தால் வீட்டுவசதி, எதிர்காலம், சுற்றுச்சூழல் போன்ற தலைப்புகளைப் பற்றிக் கருத்துரைப்பதில் அர்த்தமில்லை என்று திருவாட்டி லாவ் சொன்னார்.

“ஏனெனில் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற எதிர்காலத்தை உருவாக்குவதற்கு எதுவும் இருக்காது,” என்று அவர் குறிப்பிட்டார்.

உறவுகள், வீட்டுவசதி, தொழில், குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பு, பிள்ளை வளர்ப்பு ஆகிய ஐந்து அம்சங்கள் தொடர்பான கொள்கைகளைப் பற்றிக் கிட்டத்தட்ட 80 பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“முன்வைக்கப்பட்ட கொள்கைகள் அனைத்தும் உண்மையிலேயே மிகவும் வரவேற்கத்தக்கவையாக இருந்தன,” என்று பாராட்டினார் திருவாட்டி லாவ்.

சிங்கப்பூரின் மொத்தக் கருவள விகிதம் கடந்த ஆண்டில் 0.87 என்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சரிந்தது.

ஒருவரோடொருவர் பழகிக்கொள்ள விரும்பும் இளையரிடையே சமூகத் திறன்கள் கவலைக்குரிய அம்சமாக உள்ளன என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிணி பார்த்திபன், 25, கூறினார்.

“தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதற்குப் பங்களிக்கிறது என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.

ஹரிணியின் குழுவினர், ‘உறவுகள் மற்றும் காதல்’ குறித்துப் பேசினர். இருப்பினும், பேசப்பட்ட தலைப்புகளில் ‘குழந்தை வளர்ப்பு’ குறித்த தலைப்பு அவரை மிகவும் ஈர்த்ததாகத் தெரிவித்தார்.

“குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதைப் பற்றி யோசிப்பதற்கு முன், என் கல்வியைத் தொடரவும் பின்னாளில் என் வேலையில் சிறந்து விளங்கவும் என் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளவும் விரும்புகிறேன்,” என்று அவர் சொன்னார்.