சிங்கப்பூர் நாணயக் கொள்கையில் மாற்றம் இல்லை: பணவீக்கம் உயர்வு எச்சரிக்கை
ஈரான் போர் தொடர்ச்சியாக எரிபொருள் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதன் காரணமாக, 2027ஆம் ஆண்டு வரை பணவீக்கம் உயர்வாகவே இருக்கும் எனச் சிங்கப்பூர் நாணய ஆணையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாகப் புதன்கிழமை (அக்டோபர் 14) ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் நாணயக் கொள்கையின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளது.
வட்டி விகிதத்தைக் குறிவைக்கும் பெரும்பாலான மத்திய வங்கிகளைப் போலன்றி, மாற்று விகிதக் கொள்கையைச் சிங்கப்பூர் நாணய ஆணையம் பயன்படுத்துகிறது.
சிங்கப்பூரின் மொத்த ஏற்றுமதியும் இறக்குமதியும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 300 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருப்பதால், மாற்று விகிதக் கொள்கையே பணவீக்கத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களில் நாணயக் கொள்கையை ஆணையம் வலுவாக்கியது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 14ஆம் தேதி, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 106 அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
இவ்வாண்டின் தொடக்கத்தோடு ஒப்பிடுகையில், அந்தக் கச்சா எண்ணெய்யின் விலை 70 விழுக்காட்டிற்கும் அதிகமான உயர்வைக் காட்டுகிறது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
செப்டம்பர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்ந்து வருகின்றன.
உலகளாவிய உணவுப் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் 2026ஆம் ஆண்டில் 1.5 விழுக்காடு முதல் 2 விழுக்காடு வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஜூலையில் வெளியான அடிப்படைப் பணவீக்கம் தொடர்பான முன்னறிவிப்பைவிட இது குறைவு. இரண்டாம் காலாண்டில் 1.5 விழுக்காடாக இருந்த அந்தப் பணவீக்கம் ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 2.1 விழுக்காடாக உயர்ந்தது.
2027ஆம் ஆண்டின் பிற்பாதியில் உலகளாவிய எரிபொருள் விலைகள் குறையும்போது பணவீக்கம் தணியலாம்.
இருப்பினும், 2027ஆம் ஆண்டு முழுவதும் சராசரியாக 1.5% முதல் 2.5% வரை பணவீக்கம் பதிவாகக்கூடும்.
சாசோ வங்கியின் தலைமை முதலீட்டு உத்தியாளர் சாரூ சனானா கூறுகையில், நாணய ஆணையத்தின் முடிவு சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஆச்சரியமளித்தாலும், இது கொள்கை மாற்றமன்று என்றார்.
சிங்கப்பூரின் குறைக்கடத்தி போன்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஏற்றுமதிகள் வலுவாக இருப்பதால் நாட்டின் பொருளியல் வளர்ச்சி சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாம் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளதாக எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.