சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து இறந்ததா காகங்கள்?
திருநெல்வேலி,
நெல்லையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து இறந்ததா காகங்கள்? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடும் வெயிலால் தண்ணீர் தேடி அலையும் உயிரினங்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் சமீபகாலமாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெப்ப அலை வீசுவதால் வெயிலின் தாக்கத்துக்கு பறவைகள், விலங்குகள் என எதுவும் தப்பவில்லை. குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக வற்றிக்கொண்டே வருவதால் நாய், ஆடு, மாடுகள், காகங்கள் என ஏராளமான மற்ற உயிரினங்களும் தாகத்தால் தண்ணீர் தேடி அலைவதை பார்க்க முடிகிறது.
காகங்கள் சுருண்டு விழுந்து இறக்கும் சம்பவம்
இந்த நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகரில் கடந்த சில தினங்களாக காக்கைகள் ஆங்காங்கே அதிகளவில் சுருண்டு விழுந்து இறக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஜ. கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் கூறுகையில், "நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட் மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக காக்கைகள் ஆங்காங்கே இறந்து கிடக்கிறது. இது வெயிலின் தாக்கத்தால் நடைபெறும் நிகழ்வா? அல்லது ஏதேனும் வைரஸ் பாதிப்பா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.