பிக் பாஸ் மேடையிலேயே வெளியேற்றப்பட்ட யூடியூபர் பிரசாந்த்: காரணம் என்ன?
சென்னை: 'பிக் பாஸ் தமிழ் சீசன் 10' தொடக்க நிகழ்ச்சியின் போதே திரைப்பட விமர்சகரும் யூடியூபருமான பிரசாந்த் ரங்கசாமி, வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே மேடையில் வைத்து எவிக்ட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
நிகழ்ச்சித் தொடக்கத்தின் போது பிரித்விநாத், ஜாவீத் ஷெரிப் மற்றும் பிரசாந்த் ரங்கசாமி ஆகிய மூவரையும் மேடைக்கு அழைத்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி, இவர்களில் இருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல முடியும் என்று அறிவித்தார். உடனடியாகத் நேரடி ஆன்லைன் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் குறைந்த வாக்குகளைப் பெற்றதால், பிரசாந்த் ரங்கசாமி பிக் பாஸ் வீட்டின் நுழைவாயிலைக் கடக்கும் முன்பே மேடையில் வைத்தே வெளியேற்றப்பட்டார்.
இந்த திடீர் வெளியேற்றம் குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரசாந்த், "அனைவரும் காட்டிய அன்பிற்கும் வெறுப்பிற்கும் நன்றி; எந்த வருத்தமும் ஏமாற்றமும் இன்றி மீண்டும் எனது வேலைக்குத் திரும்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக பிக்பாஸ் 'தி காமன் மேன்' நிகழ்ச்சி குறித்து தனது யூடியூப் சேனலில் மிக கடுமையான விமர்சனங்களை பிரசாந்த் முன்வைத்திருந்தார். அதுதான் பிரசாந்த் வெளியேற்றப்பட்டதற்கான காரணமா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எனினும் பிரசாந்த் போலவே, மேலும் 4 போட்டியாளர்கள் மேடையிலேயே எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.லக்ஷ்மி பிரியா, சாத்திகா மற்றும் ஷப்னம் ஆகிய மூவரில் இருந்து இருவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் குறைந்த வாக்குகளைப் பெற்று ஷப்னம் வெளியேறினார்.
அதே போல முத்தழகி, அஸ்மிதா நீலமேகம் மற்றும் கவிதா மோகன் ஆகிய மூவருக்குமிடையே நடந்த வாக்குப்பதிவில் கவிதா மோகன் எவிக்ட் செய்யப்பட்டார். அண்ணன்-தங்கை ஜோடியாகக் களம் இறங்கிய அவினாஷ் அசோக் மற்றும் அக்ஷிதா அசோக் இடையே நடைபெற்ற நேரடிப் போட்டியில் அவினாஷ் தேர்வாக, அக்ஷிதா மேடையில் வைத்து வெளியேற்றப்பட்டார்.
குமரன் தங்கராஜன், ராகவ் ரங்கநாதன் மற்றும் புவியரசு ஆகிய மூவரில் ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் புவியரசு எவிக்ட் செய்யப்பட்டார்.