📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 06, 2026 07:04 PM

"சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், அமைச்சர்களின் சாயம் வெளுத்துவிட்டது”

"சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், அமைச்சர்களின் சாயம் வெளுத்துவிட்டது”

மதுரை: “தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், அமைச்சர்களின் சாயம் வெளுத்துவிட்டது” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

மூக்கையாதேவரின் 47-வது நினைவு தினத்தை யொட்டி, மதுரை உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரி வளாகத்திலுள்ள அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி நடத்தும் தவெகவை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அவர்கள் தூயசக்தி என சொன்னவர்கள் குதிரைபேரம் பேசி ஆட்சிக்கு வந்துள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேரை நடுரோட்டில் நிறுத்தியவர்கள். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தந்திரமாக தப்பித்துக் கொள்கின்றனர்.

காவிரி பிரச்சினையில் முதல்வர் விஜய் ஸ்டண்ட் அடிக்க முயற்சிக்கிறார். தவெகவை நம்பி வாக்களித்த இளைஞர்களும் இளம்பெண்களும் தற்போது ஏமாந்துள்ளனர். அடிப்படை புரிதல் இன்றி அக்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் பேசுகின்றனர்.

அண்ணாவின் அரசியல் புரிந்து கொண்ட காளிமுத்து போன்ற இளைஞர்கள் அன்றைக்கு அரசியலுக்கு வந்தனர். தவெகவில் அரசியல் புரிதல் இல்லாதவர்களே உள்ளனர். சட்டப்பேரவையில் முதல்வர் முதல் அக்கட்சி அமைச்சர்களின் சாயம் வெளுத்துள்ளது.

தவெக அமைச்சர்களால் பார்த்து கூட படிக்க தெரியாது. நிர்மல்குமார் பல கட்சிக்கு சென்றுவிட்டு வந்தவர். அவரை போன்ற அமைச்சர்கள் தமிழக சட்டப்பேரவையில் முன்வரிசையில் இருக்கும் அனுபவ மிக்க தலைவர்களை உதாசீனப்படுத்தி பேசுகின்றனர். அவர்களுக்கு ஆறாம் அறிவு இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.

தொகுதியில் யார் வேட்பாளர் என, அடிப்படை புரிதல் இல்லாதவர்களே எம்எல்ஏக்களாகி உள்ளனர். லாட்டரி சீட்டு விற்று வந்தவர்கள் தானே. ஆளுங்கட்சி என்பதால் தலை, கால் தெரியாமல் மூத்த உறுப்பினர்களை பேசுகின்றனர். மக்கள் தவெகவுக்கு பெரும்பான்மையை கொடுக்கவில்லை. நாசகார சக்தியான அவர்களாகவே வீழ்வர். விஜய்க்கு எதிராக பேசினால் கைது செய்யப்படுகின்றனர்.

முதல்வர் விஜய் பார்க்க அமைதியாக தெரிகிறாரே தவிர, அவர் நரித்தனமாகவும், விஷமத் தனமாகவும் செயல்படுகிறார். எதிர்கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு 3 நாள் கழித்து பதிலளிப்பதாக அவரே எழுந்து செல்கிறார். அவர் பதில் சொல்ல போகிறார். சினிமா டயலாக் மாதிரி தயாரித்து வந்து பேசுவார். அதிமுக இணைப்பு குறித்து பத்திரிகைகளில் வரும் செயதிகளை பார்த்தேன். அது பற்றி பழனிசாமி என்னிடம் எதுவும் பேசவில்லை. நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.