பிக் பாஸ் வீட்டுக்குள் சட்டசபையா? சீக்ரெட் ரூம் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி!
சென்னை: சின்னத்திரையின் மிகப்பெரிய திருவிழாவான 'பிக் பாஸ் சீசன் 10' இன்று ஆட்டம், பாட்டம், வண்ண வண்ண விளக்குகள் மிளிர மிக பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது! ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த புதிய சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களே தனக்கே உரிய எதார்த்தமான பாணியில் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பிக் பாஸ் வீட்டின் ஒவ்வொரு பகுதியாக ரசிகர்களுக்குச் சுற்றிக் காண்பித்த விஜய் சேதுபதி, இறுதியாக வீட்டின் மாபெரும் ரகசியத்தை உடைத்தார்!
பிக் பாஸ் சொன்ன அந்த ரகசியம்: முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு வீடு சுற்றி காண்பிக்கப்பட்ட போதே, இந்த சீசனில் ஒரு 'சீக்ரெட் ரூம்' இருப்பதாக கூறப்பட்டு எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது. அதன்படியே அந்த ரகசிய அறைக்குள் விஜய் சேதுபதி சென்றபோது, உள்ளே ஒரு பிரம்மாண்ட சட்டசபை செட் அமைக்கப்பட்டிருந்தது. வரிசையாக சேர்கள் போடப்பட்டு, சபாநாயகர் அமர்வது போன்ற தனி இடமும் அங்கு கம்பீரமாக அமைக்கப்பட்டிருந்தது.
மக்களின் குரல்: இது எதற்கு என விஜய் சேதுபதி கேட்க, போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் வர மெயின் டோர் என்ட்ரி பாயிண்ட் என்றால், மக்களின் குரலுக்கு இந்த ரூம்தான் என்ட்ரி பாயிண்ட்!" என பிக் பாஸ் மாஸாக விளக்கம் அளித்தார். இந்த அறையின் முழு பின்னணி போகப் போகத் தெரியும் எனக் கூறிய பிக் பாஸ் பேச்சைக் கேட்டு, அந்த சட்டசபை செட்டில் நின்றபடியே "பிக் பாஸ் சீசன் 10-க்கு உங்களின் ஆதரவு தேவை" என விஜய் சேதுபதி உரிமையோடு கோரிக்கை விடுத்தார்.
பிக் பாஸ்: இந்த சீசனின் மற்றொரு மிகப்பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலுமே ஒரே நாளில் பிக் பாஸ் தொடங்குவதுதான். இதைக் குறிப்பிடும் வகையில், கன்னட பிக் பாஸ் தொகுப்பாளர் நடிகர் கிச்சா சுதீப், மலையாள பிக் பாஸ் தொகுப்பாளர் மோகன்லால், மற்றும் தெலுங்கு பிக் பாஸ் தொகுப்பாளர் நாகார்ஜுனா ஆகிய மூவருடனும் விஜய் சேதுபதி ஒரே மேடையில் நேரடி காணொளி மூலம் உரையாடி ரசிகர்களுக்கு பெருவ விருந்தளித்தார். சீசன் தொடங்கிய முதல் நாளிலேயே சீக்ரெட் ரூம், சட்டசபை செட்டப், தென்னிந்தியப் பிரபலங்களின் சந்திப்பு என ஆரம்பமே அமர்க்களமாக அமைந்து, பிக் பாஸ் 10 சீசனை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.