சிங்கப்பூரின் நான்காவது முட்டைப் பண்ணை 2028ல் இயங்கத் தொடங்கும்
சிங்கப்பூரின் நான்காவது முட்டைப் பண்ணை நான்காண்டு தாமதத்திற்குப் பிறகு 2028ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கும்.
ஜப்பானியத் தரத்திலான முட்டைகளை அந்தப் பண்ணை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘டோமோ ஃபார்ம்’ என்னும் பெயரிலான அந்தப் பண்ணைக்கான நிலம் திருத்தும் பணி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) நடைபெற்றது. நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ அந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அந்தப் புதிய முட்டைப் பண்ணை 2024ஆம் ஆண்டு செயல்பட இதற்கு முன்னர் திட்டமிடப்பட்டது. ஆயினும், கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அந்தத் திட்டம் தள்ளிப் போனது.
அது பற்றி, பண்ணையின் உரிமையாளரான ‘ஐஎஸ்இ ஃபுட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம்’ கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 24) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் விவரித்தது.
“முட்டை உற்பத்தி செய்ய பாதுகாப்புத் தரநிலையும் சுகாதார விதிகளும் அப்போது கடுமையாக இருந்தன. அதனால், பண்ணையின் உற்பத்தி இலக்குகளைப் பாதிக்காத வகையில் போதுமான உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அத்தகைய நடவடிக்கைகள் பண்ணையின் கட்டுமானப் பணிகளைத் தாமதப்படுத்தின,” என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கென்னத் ஹோ கூறினார்.
பெருந்தொற்றுக்குப் பிந்தைய சூழல், ரஷ்யா-உக்ரேன் போர் ஆகியவற்றால் ஏற்பட்ட விநியோகத் தொடர் சிக்கல்களால் கட்டுமானச் செலவுகள் அதிகரித்ததும் தாமதத்திற்கு முக்கியக் காரணம் என்றார் அவர்.
இருப்பினும், தாமதத்தால் நில மறைமுக நன்மைகளும் விளைந்ததாக திரு ஹோ குறிப்பிட்டார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“விரிவான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு செய்வதற்கு எங்களுக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதனால், தொடக்க நாள்களில் நாங்கள் திட்டமிட்டிருந்த செலவைக் கட்டுப்படுத்த முடிந்தது,” என்றார் அவர்.
புதிய முட்டைப் பண்ணையின் உரிமையாளரான ‘ஐஎஸ்இ ஃபுட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம்’ எல்லிப்சிஸ் என்னும் பொறியியல், சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
புதிய பண்ணை $110 மில்லியன் செலவில் நிறுவப்படுகிறது. அதற்கான நிலம் திருத்தும் பணி லிம் சூ காங்கில் நடைபெற்றது.
சிங்கப்பூரில் தற்போது மூன்று முட்டைப் பண்ணைகள் உள்ளன.
சியூஸ் அக்ரிகல்சர், செங் சூன் ஃபார்ம், என் அண்ட் என் அக்ரிகல்சர் ஆகியன அவை. 2024ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, அந்த ஆண்டின் ஒட்டுமொத்த முட்டையின் தேவை 2.2 மில்லியன் முட்டைகளாக இருந்தன. மூன்று பண்ணைகளும் 736 மில்லியனுக்கும் மேற்பட்ட முட்டைகளைத் தயாரிக்கும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.