📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 29, 2026 05:02 PM

நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியில் பட்டப்பகலில் இரட்டைக் கொலை!

நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியில் பட்டப்பகலில் இரட்டைக் கொலை!

நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியில் பட்டப்பகலில் இரட்டைக் கொலை!

நெல்லை: நெல்லை மணிப்புரம் பகுதியில் இடப் பிரச்னை தொடர்பான தகராறில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் டால்டன் மற்றும் அவரது சகோதரர் நிக்கோலஸ் ஆகிய இருவரும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுன் மணிப்புரத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் ராஜரத்தினம் (78) மற்றும் அவரது சகோதரர் டால்டன் (76) இவர்கள் மணிப்புரத்தில் ஒரே காம்பவுண்டில் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவருக்கு சொந்தமான குடும்ப கோயில் உள்ளது.செந்தில் குமாருக்குச் சொந்தமான கோயில் அருகே உள்ள இடத்தில் கார் நிறுத்துவது தொடர்பாக டால்டன் குடும்பத்தினருக்கும், செந்தில் குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செந்தில்குமார் இன்று காலை இருசக்கர வாகனத்தில் அந்த வழியாகச் சென்றபோது, கோவில் முன்பு வைத்து டால்டனின் மகன் நரேனுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் கைகலப்பாக மாறியதைப் பார்த்த நிக்கோலஸ் ராஜரத்தினம், சண்டையைத் தடுக்க முயன்றுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிக்கோலஸ் ராஜரத்தினத்தை சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். இதனைப் பார்த்து டால்டன் வீட்டிலிருந்து ஓடி வந்து செந்தில்குமாரை தடுக்க முயன்றபோது, அவரையும் செந்தில்குமார் சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது.

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொருவர் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும், சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையாளர் சேகர் சஞ்சய் தேஷ்முக் மற்றும் கிழக்கு மாநகர துணை காவல் ஆணையாளர் சரவணன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். நெல்லை மாநகரில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.