📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 23, 2026 04:04 PM

சிங்கப்பூர் மோசடி: மலேசியர் கைது

சிங்கப்பூர் மோசடி: மலேசியர் கைது

சிங்கப்பூரில் செயல்பட்ட மோசடிக் கும்பலுக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படும் 27 வயது மலேசிய ஆடவர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) கைது செய்யப்பட்டார்.

டா சியாங் எனும் புனைப்பெயரைக் கொண்ட அந்த ஆடவர், சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடிகளில் ஈடுபட மலேசியர்களைப் பணியமர்த்தி, ஒருங்கிணைத்ததாய்ச் சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மலேசிய அரசக் காவல்துறை அவரை செப்டம்பர் 22ஆம் தேதி மலேசியாவில் கைது செய்து, சிங்கப்பூர்க் காவல்துறையிடம் ஒப்படைத்தது.

டா சியாங், மலேசியாவில் மலேசிய உதவியாளர்கள் நால்வரை நேரில் சந்தித்து, அவர்களுக்குப் பணிகளை ஒதுக்கி, தானியக்க வங்கி இயந்திரங்கள் மூலம் பணம் எடுப்பதை ஒருங்கிணைத்து, அவர்களுக்கான சம்பளத்தையும் வழங்கியதாக முதற்கட்ட விசாரணைகள் காட்டின.

அவரது வழிகாட்டுதலின்படி, மோசடியில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கப் பொருள்களை அந்த உதவியாளர்கள் ஜோகூர் பாருவுக்குக் கொண்டுசென்று அவரிடம் ஒப்படைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

மோசடி, சட்டவிரோதச் செயல்கள் மூலம் பெறப்பட்ட குறைந்தபட்சம் $500,000 கள்ளப் பணத்தை அவர் நல்ல பணமாய் மாற்றியதாக நம்பப்படுகிறது.

குற்றவியல் செயல்கள் மூலம் கிடைத்த அனுகூலங்களைத் தக்கவைத்துக்கொள்ள மற்றொருவருக்கு குற்றச் சதித் திட்டத்தில் உதவியதாக, டா சியாங் மீது புதன்கிழமை (செப்டம்பர் 23) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.